டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

3

நமது டில்லி நிருபர்




டில்லியில் பார்லிமென்ட் மற்றும் 9 பள்ளிகளுக்கு இன்று (பிப்ரவரி 09) மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் நடத்திய சோதனையில் புரளி என்பது தெரியவந்தது.


டில்லியில் உள்ள அல்கான் பள்ளி, ரோஹினியில் உள்ள பால் பாரதி பள்ளி, ஜஸ்பால் கவுர் பள்ளி மற்றும் அசோக் விஹாரில் உள்ள மாதா ஜெய் கவுர் பள்ளி உள்ளிட்ட 9 பள்ளிகளுக்கு இன்று இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல் டில்லி பார்லிமென்ட் வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்ததும், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும், பார்லிமென்ட் வளாகத்திலும் வெடிகுண்டுகள் எதுவும் உள்ளனவா என தீவிர சோதனை நடத்தினர்.



அந்த சோதனைகளில், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இ-மெயில் ஐடியை கைப்பற்றி, அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் இன்று டில்லியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertisement