ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வு மார்ச் 15ல் நடக்கும்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

5

சென்னை: தேர்வு மையங்கள் ஒதுக்கீடு குளறுபடியால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் மார்ச்15ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


@1brடிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்.8ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்குவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வர்களின் பெயர்கள் இல்லாததால் தமிழகம் முழுவதும் ஏராளமான தேர்வர்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். சென்னையில் தேர்வர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.


இதனால் தொடக்கத்தில் சென்னையில் மட்டும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தமிழகம் முழுவதும் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்வு மைய குளறுபடி எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில், ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;

நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான -தாள்-I- தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-II பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறு தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது.

மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் 2026ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 2026ம் ஆண்டு பிப். 28க்குள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும்.

தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) /குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

2026ம் ஆண்டு பிப்.22ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு வழக்கம் போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 2026ம் ஆண்டு பிப்.11 அன்று வெளியிடப்படும்.

இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement