செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி

புதுடில்லி: 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்ரிக்காவின் தீவு நாடான செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி ஆறு நாள் அரசுமுறை பயணமாக டில்லி வந்துள்ளார்.

நேற்று பிரதமர் மோடியை சந்தித்து, இரு தரப்பு உறவு, நிலையான வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேசினார். இதையடுத்து, செஷல்சின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவியை அளிப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா மற்றும் செஷல்ஸ் இரண்டும் புவியியல் ரீதியாக மட்டும் இணைக்கப்படவில்லை; வரலாறு, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வையால் பிணைக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சி சார்ந்த கூட்டாண்மை என்பது இரு நாட்டு உறவுகளின் வலுவான அடித்தளமாக இருந்து வருகிறது-. எங்களது அனைத்து முயற்சிகளும், செஷல்ஸ் நாட்டின் முன்னுரிமை மற்றும் தேவைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

அந்த திசையில் முன்னேறும் வகையில், 1,575 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவிக்கிறோம்.

வீட்டுவசதி, போக்குவரத்து, தொழிற்பயிற்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளின் உறுதியான திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement