கள்ளக்குறிச்சியில் மறியல் : 173 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் 172 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவராசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் ரஜினி, மாநில துணை பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கமலகண்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான 'டி-கிரேடு' ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 3ம் நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் எதிரே, கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் மதியம் 1:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 76 பெண்கள் உள்ளட 173 பேரை போலீசார் 1:15 மணியளவில் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement