ஏ.கே.டி., நினைவு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சிறிய அளவிலான காகித பைகளைக் கொண்டு பெரிய அளவிலான பை உருவாக்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், தலைமை செயல் அதிகாரி அபிநயா ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உறுப்பினர் வெங்கடேசன் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் இல்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் தலைப்பில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ள எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் சாலையோரம் மற்றும் நீர்நிலைகளில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மழை தண்ணீர் நிலத்தடிக்குள் செல்ல விடாது. விலங்குகள் பாதிக்கப்படும்.
இதையொட்டி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாட்டில் சிறிய அளவிலான 10 ஆயிரம் காகித பைகளை கொண்டு 23 மீட்டர் நீளம், 16 மீட்டர் அகலத்தில் பெரிய அளவிலான காகித பை உருவாக்கப்பட்டது.
பொதுமக்கள் துணி பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சியில் முதன் முறையாக 10 ஆயிரம் காகித பைகளை கொண்டு 15 நிமிடத்தில் பெரிய அளவிலான பை காட்சிப்படுத்தப்பட்டது.