கண்ணுக்கு கருப்பு துணி கட்டி போராட்டம்; 2ம் நாளாக களமிறங்கிய கவுரவ விரிவுரையாளர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த, இரண்டாவது நாள் போராட்டத்தில், கண்ணில் கருப்புத்துணி கட்டி அரசுக்கு எதிராக கவுரவ விரிவுரையாளர்கள் கோஷமிட்டனர்.

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், பணியாற்றும், 58 கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் காலவரையற்ற 'ஸ்டிரைக்'கை துவக்கினர்.

நேற்று அரசைக்கண்டித்து கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தால் அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

அவர்கள் கூறியதாவது:

அரசின் கடைநிலை தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் கூட எங்களுக்கு வழங்குவதில்லை. அரசு எங்களை கொத்தடிமைகள் போல வைத்துள்ளது வேதனைஅளிக்கிறது.

நான்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியும் அரசு கண்டுகொள்ளவில்லை. உயர் கல்வித்துறை அதிகாரிகள் எங்கள் பிரச்னைகள் குறித்து கேட்டறியவில்லை.

பணி நிரந்தரம் செய்வதுடன், 5 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு, கூறினர்.

வால்பாறை வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று பணியை புறக்கணித்து, கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த, 20 ஆண்டுகளாக, 30 பேர் கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகிறோம்.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின் படி, கடந்த, 1996ம் ஆண்டிலிருந்து பல காலகட்டங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கவுரவ விரிவுரையாளர்களின் பணிநிரந்தரம், யு.ஜி.சி., அறிவுரையின் படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ரூ.57,800 சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.




- நிருபர் குழு -:

Advertisement