துாய்மைப் பணியாளர்கள் நிலை உணர்ந்து முதல்வர் செயல்படுத்தும் காலை உணவு திட்டம் திருக்கோவிலுாரில் பொன்முடி எம்.எல்.ஏ., பெருமிதம்

திருக்கோவிலுார்: 'துாய்மைப் பணியாளர்களின் நிலைமையை உணர்ந்து காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்' என பொன்முடி எம்.எல்.ஏ., பேசினார்.

திருக்கோவிலுரர் நகராட்சியில் துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட துவக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

நகராட்சி கமிஷனர் திவ்யா வரவேற்றார். நகர மன்ற தலைவர் முருகன், சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம் முன்னிலை வகித்தனர்.

பொன்முடி எம்.எல்.ஏ., துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

துாய்மைப் பணியாளர்கள் காலையில் எழுந்து பணிக்குச் சென்று விடுவார்கள். அங்கு சாப்பாடு கூட அவர்களுக்கு இருக்காது. இச்சூழ் நிலையை மாற்றி உங்களுக்கு நகராட்சியே உணவு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார் நம்முடைய முதல்வர் ஸ்டாலின்.

சிறப்புமிக்க இந்த திட்டத்தை திருவள்ளூரிலே இன்று துவக்கி வைத்திருக்கிறார். இதன் மூலம் திருக்கோவிலுார் நகராட்சியில் மட்டும் 129 துாய்மைப் பணியாளர்கள் பயனுடைய உள்ளனர்.

இதில் அரசியல், கட்சி பாகுபாடு கிடையாது. துாய்மைப் பணியாளர்களின் நிலைமையை உணர்ந்து இத்திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர். இது மட்டுமல்லாது வீடு இல்லாத துாய்மைப் பணியாளர்களுக்கு வீடு வழங்குவது உள்ளிட்ட 6 முக்கிய சலுகைகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு பொன்முடி பேசினார்.

பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபி கிருஷ்ணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement