மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சலுகை அடையாள அட்டை வழங்கல் அரசு துறைகளில் தள்ளுபடி உண்டு
மதுரை: மதுரை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 1.87 லட்சம் பேருக்கு சலுகை அடையாள அட்டையை தமிழக அரசு வழங்கி வருகிறது.
தமிழக அரசு சார்பில் மகளிர் திட்டம் மூலம் பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் சுயஉதவிக்குழுக்கள், அவர்களுக்கு தொழில் கடன், சலுகைகள் வழங்கப்படுகிறது. தற்போது அரசு இக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வருகிறது. இந்த அட்டையை அரசின் பல்வேறு துறைகளிலும் சலுகை அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
90 சதவீதம் வினியோகம் அதன்படி மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதியில் 10 ஆயிரத்து 679 மகளிர் குழுக்களின் 1.14 லட்சம் உறுப்பினர்களில் 87 ஆயிரத்து 41 பேருக்கும், நகர்புறங்களில் உள்ள 9818 குழுக்களின் 1.08 உறுப்பினர்களில் ஒரு லட்சத்து 875 பேருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான விபரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கு பிரின்ட் செய்த கார்டுகள் வினியோகிக்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
இந்த அட்டையைக் கொண்டு அரசு பஸ்களில் 25 கிலோ வரை கட்டணமின்றி பொருட்களை எடுத்துச் செல்லலாம். முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில், இவர்கள் எதிர்பாராத விபத்து, அறுவை சிகிச்சைகளுக்கு அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளில் செலவு தொகையை பெறலாம். கோ ஆப்டெக்ஸ் போன்ற கூட்டுறவுத்துறை நிறுவனங்களில் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள தள்ளுபடி போக, கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி பெறலாம்.
உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை, உற்பத்தி உறுதிமொழிக் கடன், ஆதரவற்ற பெண்களுக்கு கடன், வேளாண், மண்பாண்டம், நகைக்கடன், வீட்டுக்கடன், சிறுவணிக கடன், நிதிக்கடன், வாகனம் உட்பட பலவற்றையும் பெற இந்த அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் வரவேற்பு ஆவின் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கும் குறிப்பிட்ட சதவீத தள்ளுபடியை பெறலாம். இ சேவை மையங்களில் சுயஉதவி குழுவினர் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்கும்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி பெறமுடியும். இதுபோன்ற சலுகைகளை தற்போது மகளிர் குழுவினர் பெற்று வருகின்றனர்.
எஸ்.பாறைப்பட்டி திவ்யா கூறுகையில் ''எங்கள் குழுவில் 12 பேர் உள்ளனர். ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சம் கடன் பெற்று விவசாயம், ஜவுளி போன்றவற்றில் தொழில் செய்கிறோம்.
தற்போது வழங்கியுள்ள அடையாள அட்டையால் பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. மக்காச்சோளம் பயிரிட்டுள்ள நான், அதை அரசு பஸ்களில் குறிப்பிட்ட அளவுக்கு லக்கேஜ் இன்றி கொண்டு செல்ல முடியும். இதுபோல சலுகைகளால் பெண்கள் மேம்பாடு பெறவாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.