ஜாதி பெயர்களை நீக்க ஏற்கனவே பிறப்பித்த அரசாணைப்படி நோக்கம் நிறைவேறியதா: அரசிடம் அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்
மதுரை: தெருக்கள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க தமிழக அரசு 2025 ல் பிறப்பித்த அரசாணைக்கு எதிரான வழக்கில், இதுபோல்1978 ல் பிறப்பித்த அரசாணையின்படி நோக்கம் நிறைவேறியதா, அதனடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும். தெருக்கள், சாலைகளுக்கு தலைவர்கள், கவிஞர்கள், மலர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என தமிழக அரசு 2025 அக்.6 ல் அரசாணை பிறப்பித்தது.
இதற்கு எதிராக மதுரை பரமசிவம் தாக்கல் செய்த பொதுநல மனு: மக்களிடம் கருத்து கோராமல் அவசரகதியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பாஸ்போர்ட், ஆதார், வருமானவரி, வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நடைமுறை சிரமங்கள் உள்ளன. அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
2025 அக்.17 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 'அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. முதற்கட்ட அறிவியல்பூர்வ கள ஆய்வு மேற்கொள்ளலாம். அடுத்த கட்ட மேல்நடவடிக்கை கூடாது,' என இடைக்கால உத்தரவிட்டது.
நேற்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.
நீதிபதிகள்:
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசாணையில் குறைபாடுகள் உள்ளன. அதை குறுகிய காலத்தில் எப்படி செயல்படுத்த முடியும். ஜாதி பெயர்கள் நீக்குவது குறித்து 1978 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் நோக்கம் நிறைவேறிவிட்டதா, அதனடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி பிப்.23 க்கு ஒத்திவைத்தனர்.