விரிவான அறிக்கை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு
புதுடில்லி : ஜனக்புரியில் ஜல்போர்டு தோண்டிய, 15 அடி பள்ளத்தில் பைக்குடன் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, டில்லி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி கைலாஷ்புரியை சேர்ந்த வாலிபர் கமல் பயானி, 25. தனியார் வங்கியில் கால்சென்டர் ஊழியராக பணியாற்றினார்.
15 அடி பள்ளம் கடந்த, 5ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பும் போது, ஜனக்புரியில் ஜல்போர்டு தோண்டி வைத்திருந்த, 15 அடி பள்ளத்தில் பைக்குடன் விழுந்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜனக்புரி போலீசார், ஜல்போர்டு பணிகளை செய்து வரும் சப்- கான்ட்ராக்டர் ராஜேஷ் குமார் பிரஜாபதி, தொழிலாளர் யோகேஷ் என, இருவரை கைது செய்தனர். ஜல்போர்டு அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
பைக்கில் வந்து பள்ளத்தில் விழுந்து வாலிபர் கமல் பயானி இறந்ததை பார்த்தும், அவரை காப்பாற்ற முயற்சிக்காததுடன், அதுபற்றி போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தாமதமாக தகவல் தெரிவித்ததால், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த டில்லி நீதிமன்றம், வாலிபர் இறந்த சம்பவம் குறித்த விசாரணையின் தற்போதைய நிலை அறிக்கை, ஜல்போர்டு பள்ளம் தோண்டிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, டில்லி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்ஜாமின் அதேநேரத்தில், இந்த ஜனக்புரி விபத்து தொடர்பாக, போலீசாரால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட கான்ட்ராக்டர்களான ஹிமான்ஷு குப்தா, கவிஸ் குப்தா என்ற இருவர், முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களுக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணை நாள் வரை, இருவருக்கும் எதிராக, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.