சட்டவிரோதமாக புத்தகம் வெளியான புகார் பென்குயின் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
புதுடில்லி : 'ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் வெளியிடப்படாத புத்தகம், சமூக வலைதளங்களில் பரவியது குறித்து விளக்கம் அளிக்கும்படி, 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' நிறுவனத்திற்கு டில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.
இதுதொடர்பாக டில்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மனோஜ் முகுந்த நரவனே, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், அந்தப் புத்தகம் இன்னும் வெளியிடப் படவில்லை.
பதிப்பு அளவில் தான் உள்ளது. இருப்பினும், புத்தகத்தின் சில பகுதிகள் டிஜிட்டல் உள்ளிட்ட பிற வடிவங்களில், சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதனால், வெளியீட்டாளர், ராணுவத்தின் முன்னாள் தளபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
அதனால், புத்தகத்தை வெளியிட உள்ள பென்குயின் இந்தியா நிறுவனத்திற்கு, டில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், புத்தகம் முறைப்படி வெளியாகும் முன், சமூக வலைதளங்களில் பரவியது எப்படி என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில் தரும்படி கோரப் பட்டுள்ளது. அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.