மூன்று பேர் கொலை சாமியார் சிக்கினார்
புதுடில்லி : டில்லி பீரகரி மேம்பாலம் அருகே, பூட்டிய காருக்குள் மூன்று பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், சாமியார் ஒருவரை டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
டில்லியில், பீரகரி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிறன்று கார் ஒன்று நின்றிந்தது. அதில், ரந்தீன், 76, ஷிவ் நரேஷ் சிங், 47, மற்றும் லட்சுமி தேவி, 40 என்ற மூன்று பேர் இறந்து கிடந்தனர். காரில், ரந்தீர் ஓட்டுநர் இருக்கையிலும், மற்ற இருவரும் பின்புறத்திலும் அமர்ந்திருந்தனர்.
மூவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால், அதுதொடர்பாக விசாரணை நடத்திய டில்லி போலீசார், நேற்று மவுலானா மற்றும் மாய மந்திரவாதி என்று கூறப்படும், தனக்கு தானே சாமியார் என, அறிவித்துக் கொண்டுள்ள கமாருதீன் என்பவரை கைது செய்தனர்.
அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான கமாருதீன் ஒரு வருடமாக மூவருடனும் தொடர்பில் இருந்ததாகவும், சம்பவம் நடந்த அன்று முற்பகலில், காரின் முன் பகுதியில் அமர்ந்து அவர் பயணம் செய்ததும், சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டதாக போலீசார் கூறினர். மூவரும் கொலையானது எப்படி என, கமாருதீனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.