ரூ.10 லட்சம் லஞ்சம்: ஏ.எஸ்.ஐ., சிக்கினார்

புதுடில்லி : சொத்து பிரச்னையை தீர்த்து வைக்க, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி சப்-இன்ஸ்பெக்டரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

டில்லி போலீசில், சிஆர் பார்க் போலீஸ் நிலையத்தின் உதவி சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த நபர், சொத்து பிரச்னை ஒன்றை தீர்த்து வைக்கவும், புகாருக்கு ஆளான நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

பிறகு பேரம் பேசியதில், 10 லட்சம் ரூபாய் தரும்படி கூறியுள்ளார். இந்த லஞ்சத்தை கொடுக்க விரும்பாத நபர், சி.பி.ஐ.,யில் புகார் அளித்தார்.

அந்த அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்த யோசனைப்படி, உதவி சப் - இன்ஸ்பெக்டரிடம், புகாருக்கு ஆளான நபர் லஞ்சம் கொடுத்த போது, உதவி சப் - இன்ஸ்பெக்டரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement