கொத்தடிமைகளை வைத்திருந்தால் சிறை; தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆண்டுதோறும், 9ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா மேற்பர்வையில், குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை தினம் அனுசரிக்கப்பட்டது. அதில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றி விவரிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் கூறுகையில், ''கொத்தடிமை தொழிலாளர்கள் கண்டறியப் பட்டால் பணி அமர்த்தப்பட்ட உரிமையாளருக்கு சட்டப்படி, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகார்களை கட்டணம் இல்லா தொலைபேசி எண்-1800 4252 650 மற்றும் மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர், ஆர்.டி.ஓ. , உதவி ஆணையர் அலுவலகம் மாவட்ட மற்றும் கோட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினர், காவல் துறையினருக்கு தெரிவிக்கலாம்,'' என்றார்.

Advertisement