முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி கால்வாய் சீரமைப்பு: கவுன்சிலர் புகார்

மதுரை: 'மதுரை செல்லுாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றி பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொள்வதால் செல்லுார் பகுதி முழுதும் கழிவுநீரில் மிதக்கும் அபாயம் ஏற்படும்' என வார்டு 27 அ.தி.மு.க., கவுன்சிலர் மாயத்தேவன் வேதனை தெரிவித்தார்.

செல்லுார் கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்கு செல்லும் 2.6 கி.மீ., பந்தல்குடி கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற ரூ.70 கோடி ஒதுக்கி பணிகள் நடக்கின்றன. இப்பணிகளுக்காக, செல்லுார் பகுதியில் இருந்து பந்தல்குடி கால்வாயில் கலக்கும் மழைநீர், கழிவுநீர் வடிகால்களைபொதுப்பணித் துறையினர் மண்ணால் அடைக்கின்றனர். இதனால் கழிவுநீர் செல்லுார் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலர் மாயத் தேவன் கூறியதாவது: பம்பிங் ஸ்டேஷன் இல்லாததால் 50 ஆண்டுகளாக 23, 24, 25, 26, 29, 31 வார்டு கழிவுநீர், மழைநீர் பந்தல்குடி கால்வாயில் கலக்கிறது. தற்போது கால்வாய் சீரமைப்பு நடக்கும் நிலையில் பொதுப்பணித் துறையினர் மழைநீர்வடிகால்களை அடைக்கின்றனர்.

இதனால் கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கமிஷனர் சித்ரா உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை. கால்வாயை சீரமைக்கும் முன், கோரிப்பாளையம் அருகே பம்பிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கழிவுநீர் பாதையை அடைத்தால் வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படும். மக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாவிடில், மறியல் செய்வோம் என்றார்.

Advertisement