தொழிலதிபரை மிரட்டியவர் அதிரடி கைது
புதுடில்லி : பிரபல தாதா ஹிமான்சு பாஹ் கோஷ்டியை சேர்ந்தவர் என போலியாக கூறி, தொழிலதிபரிடம் இருந்து, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க முயன்ற நபர், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வட மேற்கு டில்லியின் ரோஹினி என்ற இடத்தில் தன் குடும்பத்தினருடன் வசிப்பவர் ரஜத் குப்தா. தொழிலதிபரான இவர், கடந்த 2022ல், 10 கோடி ரூபாய்க்கு, நிலம் ஒன்றை, தன் மனைவி மேகா கோயல், மைத்துனி நிதி மற்றும் உறவினர் பர்வீன்குமார் ஆகியோர் பெயரில் வாங்கினார்.
அதை அறிந்த, நரேலா என்ற இடத்தில் வசிக்கும் விகாஸ் என்ற விக்கி என்ற நபர், சர்வதேச தொலை தொடர்பு அழைப்புகள் மூலம் அந்த தொழிலதிபர் ரஜத் குப்தாவை தொடர்பு கொண்டார்.
அப்போது, 'நான், பிரபல தாதா ஹிமான்சு பாஹ் கோஷ்டியை சேர்ந்தவன். மரியாதையாக, 2022ல் வாங்கிய சொத்துகளை, என் பெயரில் மாற்றி எழுதித் தர வேண்டும். இல்லையென்றால், சுட்டுக் கொன்று விடுவேன்' என பல முறை மிரட்டினார்.
பேகம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தொழிலதிபர் ரஜத் குப்தா புகார் அளித்தார். அதையடுத்து, அவரை கொலை செய்து விடுவதாக கூறிய விக்கியை அவரது வீட்டில் நேற்று அதிகாலை சுற்றி வளைத்த போலீசார் விசாரித்தனர்.
அப்போது, அவருக்கும், தாதா ஹிமான்சு பாஹ் கோஷ்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அப்பாவிகளை மிரட்டுவதற்காக தாதாவின் பெயரை அவர் கூறி வந்ததும் தெரிய வந்தது.
அதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவருக்கு வேறு ஏதேனும் ரவுடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.