தொழில் துறை உறவுகள் சட்டம் திருத்த மசோதா நிறைவேற்றம்
புதுடில்லி: பழைய தொழில்துறை சட்டங்கள் தொடர்பான விதியால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்ட தொழில் துறை உறவுகள் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
தொழிற்சங்க சட்டம், தொழில் துறை வேலைவாய்ப்பு சட்டம், தொழில் துறை தகராறு சட்டம் ஆகிய மூன்று பழைய சட்டங்களை ஒருங்கிணைத்து, 2020ல் தொழில் துறை உறவுகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.
கடந்தாண்டு நவம்பரில், இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
இதில், பழைய மூன்று சட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும், அவற்றின் கீழ் ஏற்கனவே நடந்த நடவடிக்கைகள், உரிமைகள், ஒப்பந்தங்கள், வழக்குகள் போன்றவை தொடர்ந்து செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய பிரிவு 104ல் சேமிப்பு விதிகள் உள்ளன.
புதிய சட்டம் அமலானதும், பழைய சட்டங்கள் தானாகவே ரத்தாகும் என்பதும் இந்த விதியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில்துறை உறவுகள் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.