'ரிவால்டோ' யானை உடல் மசினகுடியில் கண்டெடுப்பு

சென்னை: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிச்சுற்று பகுதியான மசினகுடி அருகே, வாழைத்தோட்டம் பகுதியில், ஒரு காட்டுயானை அடிக்கடி வந்து சென்றது.

இதை அடையாளப்படுத்தும் வகையில், அப்பகுதி மக்கள், 'ரிவால்டோ' என குறிப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்த யானை, கூடலுார் வனப்பகுதியில் விடப்பட்டது. அக்., மாதம் முதல், இந்த யானை வனத்துறையின் கண்காணிப்பில் இருந்து விடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் யானையைக் காணவில்லை.

வனத்துறையினர், 'ட்ரோன்' போன்ற கருவிகளை பயன்படுத்தி யானையை தேடி வந்தனர். டிச., இறுதியில், வனப்பகுதியில் யானை இருப்பது தெரிந்தது. பின், இந்த யானை மீண்டும் மாயமானது.

இந்நிலையில், மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியில், நேற்று காலையில் ரிவால்டோ யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், ரிவால்டோ யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

தற்போது, 54 வயதான நிலையில், ரிவால்டோ யானை வலு குன்றி இருந்தது.

வேறு ஒரு ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில் கடுமையாக காயம் ஏற்பட்டதால், ரிவால்டோ யானை இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

'ரிவால்டோ' போன்ற வயதான யானைகளை, வனத்துறையினர் முறையாக கண்காணிக்காததே, இந்த சம்பவத்துக்கு காரணம் என, வன உயிரின ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

Advertisement