தயாராகுங்கள் மாணவர்களே!
பி ளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் துவங்குகிறது. மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 461 மாணவ, மாணவியர் தேர்வெழுத தயாராகி வருகின்றனர். செய்முறை தேர்வுகள் துவங்கி நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கு இரண்டு வாரம் மட்டுமே உள்ளதால், அதற்கேற்ப மாணவ, மாணவியர் தயாராவதும், பெற்றோர் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதும் அவசியம்.
பள்ளி கல்வியில் முக்கியமான காலகட்டம்; உயர்கல்விக்கான அஸ்திவாரம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு என்பதால், மாணவர்கள் அதை சிறப்பாக கடக்க, முழு பலத்துடன் தயாராக வேண்டியது அவசியம்.
இனியும் தாமதிக்காமல் தினசரி படிக்க வேண்டும் ஆனந்தி, தலைமையாசிரியர், பெருந்தொழுவு, அரசு மேல்நிலைப்பள்ளி: முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும், கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நாள் முழுதும் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி பெற தேவையான வினா - விடைகள் தினமும் சொல்லித்தந்து, எழுத பயிற்சி தரப்படுகிறது.
ஒரு மதிப்பெண், மூன்று மற்றும் ஐந்து, நெடுவினாக்களுக்கு நேர மேலாண்மை பின்பற்றி விடையெழுதுவது குறித்து தொடர்ந்து பயிற்சி தரப்படுகிறது. இனி தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளது. தேர்வு நேர ஒழுக்கம் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து பள்ளிக்கு வந்து தவறாமல் சிறப்பு வகுப்புகளை கவனிக்க வேண்டும். இனி வரும் நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் கூட நிச்சயம் தேர்ச்சி பெற முடியும். மனம் தளராமல் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு சிரத்தையுடன் படிக்க வேண்டும்.
நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் அஸ்வின், கல்வியாளர்: தேர்வு நேரத்தில் வரக்கூடிய பயம், பதட்டம் குறிப்பிட்ட மாணவருக்கு மட்டும் இருக்காது. யாரெல்லாம் தேர்வுக்கு தயாராகிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் பதட்டம் இருக்கும். அந்த பதட்டத்தை கையாள தெரிந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை எழுத வேண்டும். மதிப்பெண் வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டால், பதட்டம் தணிந்து விடும். பதட்டமே சந்தோஷமாக மாறி விடும்.
தெரியாத கேள்விக்கு நீண்ட நேரம் ஒதுக்க கூடாது. அதனால், பதட்டம், பயம் ஏற்படும். தேர்வு மேல் பயம் வர காரணமே படித்த கேள்விக்கு சரியாக விடை எழுத முடியாமல் போவதும், படிக்காமல் போன கேள்விக்கு தேவையில்லாத பதிலை எழுதுவதும் தான்.
படித்து விட்டோம்; முழுமையாக படித்து விட்டோம் என நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வினாத்தாள் எப்படியாக இருந்தாலும், நாம் எழுத வேண்டும் என்ற தைரியம் பிறக்க வேண்டும்.
தேர்வறைக்கு மகிழ்ச்சியுடன் வந்து தேர்வு எழுத வேண்டும். படித்ததை, தெரிந்ததை 'பிரசண்டேசன்' கொடுப்பது முக்கியம். அழகான கையெழுத்து அவசியம்.
கடைசி நேரத்தில் 'அந்த கேள்வியா படிச்சிட்டியா, இந்த கேள்வி படிச்சிட்டியா' என தேர்வறைக்கு செல்லும் நாளன்று அருகில் இருக்கும் மாணவர், மாணவியர் பேச்சை கேட்டு குழம்பக்கூடாது. பெற்றோர் கடைசி நிமிடத்தில், 'எல்லாம் படித்து விட்டாயா?' என கேட்டு, பதட்டம் அடைய செய்யக் கூடாது.
உங்கள் மகன்/மகளை யாருடனும் ஒப்பிடாமல், நீ சரியாக, கவனமாக தேர்வு எழுது ஜெயிப்பாய் எனக்கூறி அனுப்பி வைக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் ஜெயிப்பீர்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். அதே நேரம், நிறைய மதிப்பெண் வாங்கினால் தான் ஜெயித்ததாக அர்த்தம் இல்லை.
எந்த மதிப்பெண் வாங்கினாலும், உங்களுக்கான கல்லுாரி வாய்ப்புகள் கட்டாயம் கிடைக்கும்.
மேலும்
-
காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு
-
தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் ஓயாத வன்முறை; ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
-
ஹைதராபாத்தில் 'கடவுளின் தேசம்'
-
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி
-
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு