ஆன்லைனில் அலுவலக கட்டணம்.. ஆப்லைனில் அன்பளிப்பு கட்டணம்; தனியார் மருத்துவமனைகளுக்கு சொத்துவரியில் சீரமைப்பு தேவை

மதுரை: தனியார் மருத்துவ மனைகள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி மாநகராட்சி சான்றிதழ் பெற்றாலும் அதேஅளவு தொகையை அதிகாரி களுக்கு நேரில் தந்தால் தான் சான்றிதழ் பெற முடிகிறது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஒரே சீரான சொத்துவரி விதிப்பை கொண்டுவர வேண்டும் என இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:



தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாநகராட்சிகளில் தனியார் மருத்துவமனைகளுக்கான லைசென்ஸ்கள் நடைமுறைகள் மாறுபடுகின்றன. ஒரு சில மாநகராட்சிகளில் சொத்து வரி விதிப்பு 10 முதல் 20 சதவீதமாகவும் மற்றவற்றில் கூடுதலாக 100 சதவீதம் வரை சொத்துவரி விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தனியார் மருத்துவமனைகளுக்கான சொத்துவரி விதிப்பு அதிகமாக உள்ளது. ரூ.2500 கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.50ஆயிரம் கட்டணம் செலுத்துகிறோம். சிறிய கிளினிக் வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

இஷ்டம் போல் லைசென்ஸ்



அந்தந்த மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி டிரேட் லைசென்ஸ், ஜெனரேட்டர் லைசென்ஸ், சானிட்டேஷன் லைசென்ஸ் என விதவிதமான லைசென்ஸ்களுக்கேற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்கின்றன. 1970 முதல் 1980களில் மருத்துவமனைகளே சொந்தமாக இருமல் மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கிய போது டி.எல்.ஓ., (டேஞ்சரஸ் அன்ட் அபன்ஸ்) லைசென்ஸ் வாங்கும் நடைமுறை இருந்தது. எந்த கிளினிக், மருத்துவமனை, நர்சிங் ஹோமிலும் சொந்தமாக மருந்து தயாரிப்பதில்லை. இன்னமும் சில மாநகராட்சிகளில் டி.எல்.ஓ., லைசென்ஸ் தரப்படுகிறது.

ஒரே கட்டணம் தேவை



கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக வந்து கையெழுத்து வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அப்போது சான்றிதழ் கட்டணத்தைப் போல அதேஅளவு அதிகாரி களுக்கு தனியாக பணம் தரவேண்டியுள்ளது.

கட்டணம் தராவிட்டால் வேண்டுமென்றே குப்பையை கொண்டு வந்து மருத்துவமனை முன் வைத்து விட்டு அபராதம் விதிக்கின்றனர். எங்கள் தொழில் பாதிக்கப்படும் என்பதால் நேரடியாக புகார் கொடுக்க முடியவில்லை.

ஆன்லைனில் கட்டணம் செலுத்திய பிறகு ஆப்லைனில் அதிகாரிகளுக்கு கட்டணம் கேட்கும் நடைமுறையை மாற்ற வேண்டும். இதற்கு ஒரே வழி தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரே மாதிரியான சொத்து வரி விதிப்பதற்கான அரசாணை இயற்ற வேண்டும். தேவையான சான்றிதழ்களுக்கு மட்டும் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.

Advertisement