குவாரி துவங்க கருத்து கேட்பு; வேறு கிராமத்தில் நடத்தாதீங்க!

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில், 40க்கும் அதிகமான குவாரிகள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது, சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் மீண்டும் குவாரிகள் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அரசம்பாளையம் ஊராட்சியில், 1.41 ஹெக்டரிலும், மயிலேறிபாளையத்தில், 1.06 ஹெக்டரிலும் குவாரி துவங்க, ஏலூர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது.

இதே போன்று, சொக்கனூர் ஊராட்சியில் குவாரி துவங்க, அப்பாச்சிகவுண்டன்பதியில் உள்ள மண்டபத்தில் கடந்த 12ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

விவசாயிகள் கூறியதாவது:

கிணத்துக்கடவு பகுதியில் அதிகளவில் குவாரிகள் உள்ளன. பல்வேறு விதிமுறைகளை மீறி குவாரிகள் செயல்படுகின்றன. இதை தவிர்க்கும் விதமாக, தற்போது எந்த ஊராட்சியில் குவாரி துவங்கப்படுகிறதோ அங்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், மாற்று இடத்தில் நடத்துகின்றனர். இது ஒரு தலைப்பட்சமாக உள்ளது.

இவ்வாறு கூட்டம் நடத்தினால் உள்ளூர் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, குவாரி துவங்க எளிதாக அனுமதி வழங்கப்படுகிறது. கிராமம் மாறி கூட்டம் நடத்துவதை வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement