நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!

பெரும்பாலான குடும்பங்களில் தாய், தந்தையர் வாங்கி வைத்த காலி மனையில் அவர்களின் வாரிசுகள் வீடு கட்ட நடவடிக்கை எடுப்பது வழக்கம். இவ்வாறு பெற்றோர் வாங்கி வைத்த மனையில் வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர், குறிப்பிட்ட சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர் வாங்கி வைத்த மனை என்றால், அது வாரிசுகள் பெயரில் பல்வேறு பாகங்களாக பிரிய வாய்ப்பு உள்ளதா என்பதை முதலில் பாருங்கள். வாரிசு அடிப்படையில் பாகம் பிரிக்க வேண்டிய தேவை இல்லை என்ற சூழலில், அதில் வீடு கட்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை துவங்கலாம்.

தமிழகத்தில், 20, 30 ஆண்டு களுக்கு முன் உருவான பெரும்பாலான மனைப்பிரிவுகளில் போதிய அகலத்துக்கு சாலைக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்காது. எனவே, உங்களிடம் உள்ள காலி மனை அமைந்துள்ள பகுதியில் சாலைக்காக விடப்பட்ட நிலத்தின் அகலம் தொடர்பான விஷயங்களை கவனமாக பாருங்கள்.

இதற்கு அப்பால், நிலத்தின் தற்போதைய நிலை என்ன? அதில் கட்டுமான பணிகளை துவங்குவதற்கான சூழல் நிலவு கிறதா என்று பாருங்கள். புதர்கள், மரங்கள் மட்டும் இருந்தால் ஜே.சி.பி., வாகனத்தை வரவழைத்து அதை சில மணி நேரங்களில் அப்புறப்படுத்திவிடலாம்.

ஆனால், அந்த நிலத்தை நீங்கள் நீண்டகாலம் பராமரிக்காமல் விடும் நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உள்ளூர் மக்கள் அங்கு மண் எடுத்ததால் பள்ள மாகி இருக்கலாம். அந்த பள்ளத்தில் குப்பை கொட்டப்பட்டு அது குப்பை மேடு போல் மாறி இருக்கலாம்.

அனுமதியின்றி நிலங்கள் உள்ளூர் மக்களால் பள்ளம் தோண்டப்பட்டு இருக்கலாம். சில இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டி நிலத்தில் தேவையில்லாத மேடு ஏற்பட்டு இருக்கலாம். இது போன்ற அமைப்புகள் ஏற்பட்டு இருக்கிறதா என்று முதலில் கவனியுங்கள்.

உங்கள் நிலத்தில் உள்ள மண் வளம் அனுமதியின்றி எடுக்கப்பட்டு இருந்தால் அது குறித்து சட்டப்படி உரிய அதிகாரிகளிடம் புகார் அளிப்பதா என்பதை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. இதில் உணர்ச்சி வசப்பட்டு, அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.

காலி மனையில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அங்கு புதிய வீட்டுக்கான பணிகளை துவக்கும் முன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வெளியில் இருந்து மண் வாங்கி பள்ளத்தை மூடி, தரை மட்டத்தில் இருந்து புதிய அஸ்திவாரம் அமைக்கும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

எனவே, பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்ட விஷயத்தை தெளினாக தெரித்து கட்டட அமைப்பியல் பொறியாளரிடம் உரிய வழிகாட்டுதல்கள் பெற வேண்டும். இதன் அடிப்படையில் அஸ்திவாரம் அமையும் இடங்களை முடிவு செய்வது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

நிலத்தை நீங்கள் நீண்டகாலம் பராமரிக்காமல் விடும் நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உள்ளூர் மக்கள் அங்கு மண் எடுத்ததால் பள்ளமாகி இருக்கலாம், அந்த பள்ளத்தில் குப்பை கொட்டப்பட்டு அது குப்பை மேடு போல் மாறி இருக்கலாம்.

Advertisement