விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
நாடு முழுவதும் புதிய வீடு வாங்குவதற்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்து வருகிறது. அதே நேரம், மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கட்டுமான நிறுவனங்கள், அரசு துறைகள் வாயிலாக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இருப்பினும், வீடு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினரில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கான வீடு இன்னும் கிடைக்கவில்லை என்று காத்திருக்கின்றனர்.
பெருநகரில் நிலத்தின் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வீடுகளின் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. இதற்கு இணையாக வருவாய் உயராத நிலையில் ஏழை மக்கள் வீடு வாங்க முடியாமல் திண்டாடும் நிலையை பார்க்க முடிகிறது.
வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு, ஜி.எஸ்.டி., வரி குறைப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதனால், புதிய கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதன் அடிப்படையில், 2025ம் ஆண்டு புதிய திட்டங்களின் வருகையும், வீடுகள் விற்பனை எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயத்தில் விற்காத வீடுகள் எண்ணிக்கையும் பெரு நகரங்களில் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும், 2025 ஜன., முதல் டிச., இறுதி வரையிலான காலத்தில், 5.76 லட்சம் வீடுகள் விற்காமல் தேங்கியுள்ளன. 2024ல் இந்த எண்ணிக்கை, 5.53 லட்சமாக இருந்தது என்ற அடிப்படையில் தற்போது விற்காத வீடுகள் எண்ணிக்கை, 4 சதவீதம் உயர்ந்துள்ளதாக 'அனராக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில், 2025ல் விற்காத வீடுகள் எண்ணிக்கை 33,434 ஆக இருந்தது. இது, 2024ல், 28,423 ஆக இருந்தது என்ற அடிப்படையில் தற்போது, விற்காத வீடுகள் எண்ணிக்கை, 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவர ஆய்வு வாயிலாக தெரியவந்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் தேவை அதிகம் உள்ள நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் தேக்கம் அடைவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. விலை உயர்வு இதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் புதிதாக அடுக்குமாடி திட்டத்தை அறிவிக்கும் போது, ஒரு சதுரடிக்கான விற்பனை விலை 7,000 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், அத்திட்டத்தில் பணிகள் முடிக்கும் போது, கட்டுமான செலவு 30 சதவீதம் வரை அதிகரிப்பதால், அதன் தாக்கம் விலையில் சேர்கிறது.
இதன் காரணமாக மக்கள் வீடு வாங்குவதில் இருந்து விலகும் அளவுக்கு முடிவு எடுக்கும் நிலை ஏற்படுகிறது. வீட்டின் விலை உயரும் போது, வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்தாலும், அது வீடு வாங்குவோருக்கு மாத தவணை என்ற பெயரில் சுமையாகவே அமைகிறது.
சென்னை போன்ற நகரங்களில் புதிய வீடு வாங்கும் மக்களின் பொருளாதார நிலை உயர்வதில் வேகம் குறைந்து காணப்படுவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி., குறைப்புக்கு பின்னும் வீடுகளின் விலை குறையாததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
மேலும்
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
-
கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்
-
ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி.. இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்; தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
-
கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை