வங்கதேசத்திற்கே வெற்றி சொந்தம்: ஒற்றுமையுடன் செயல்பட தாரிக் ரஹ்மான் அழைப்பு

5


டாக்கா: வங்கதேச பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பிறகு தனது முதல் உரையில், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மான் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.


இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், வங்கதேச பிரதமராக பொறுப்பேற்க உள்ள தாரிக் ரஹ்மான் கூறியதாவது: இந்த வெற்றி வங்கதேசத்திற்குச் சொந்தமானது. ஜனநாயகத்திற்குச் சொந்தமானது. ஜனநாயகத்திற்காக பாடுபடும் மற்றும் உயிரை தியாகம் செய்த மக்களுக்குச் சொந்தமானது. இன்று முதல், நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம். அதுமட்டுமின்றி உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.


மக்களுக்காக பொறுப்புடன் செயல்படும் அரசு மீண்டும் உருவாகியுள்ளது. எந்தவொரு தீய சக்தியும் நாட்டில் எதேச்சதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட முடியாது. அடிபணிந்த அரசாக மாற்றப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய மக்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும். மக்களின் நலன்களே நமது வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும்.


வங்கதேச மக்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தடைகளையும் தாண்டி, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு நீங்கள் வழி வகுத்துள்ளீர்கள். இவ்வாறு தாரிக் ரஹ்மான் கூறினார்.


மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி, மொத்தமுள்ள 299 தொகுதிகளில் 216 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி, 20 ஆண்டுகளுக்கு பின், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 60, பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

Advertisement