ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா

1

நியூயார்க்: மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியா, ஏஐ உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.



'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் 2026' மாநாடு, நாளை பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், பிப்ரவரி 19ல் பிரதமர் மோடி முக்கிய அமர்வில் உரையாற்ற உள்ளார். திறன் மேம்பாடு, சமூக உள்ளடக்கம், ஏ.ஐ., பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட ஏழு துறைகள் விவாதிக்கப்பட உள்ளன.


மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார்கள். ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொள்ள இருக்கிறார்.


இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அன்டோனியோ குட்டெரெஸ் அளித்த பேட்டி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் முழு உலகிற்கும் பயனளிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளுக்கோ அல்லது இரண்டு வல்லரசுகளுக்கோ ஒதுக்கப்பட்ட ஒரு சலுகையாக மட்டும் இருக்கக்கூடாது.


மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியா, ஏஐ உச்சிமாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தியாவை நான் மனதாரப் பாராட்டுகிறேன். எல்லா இடங்களிலும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.


மனிதகுலத்தின் நலனுக்காக ஏஐ ஒரு உலகளாவிய கருவியாக மாறுவது மிகவும் அவசியம். உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உலக விவகாரங்களிலும் அதன் செல்வாக்கிலும் பெரிய அளவில் இந்தியா பங்களித்து வருகிறது. உலக அளவில் பல்வேறு விஷயங்களில்
இந்தியா வகிக்கக்கூடிய பங்கின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருப்பதால், பிரதமர் மோடியுடன் இதைப் பற்றி விவாதிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.

Advertisement