விஜய் கூட்டத்தில் பலியானவரின் உடலை பெற மறுத்து முற்றுகை!

2

சேலம்: சேலத்தில் விஜய் கூட்டத்தில் பலியானவரின் உடலை பெற மறுத்து, கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

த.வெ.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்தது. இதில் பங்கேற்க அடையாள அட்டையுடன் சென்ற, சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த பட்டறை தொழிலாளி சுராஜ், 34, வெயிலால் மயங்கி உயிரிழந்தார்.

உடலை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், உடலை பெற மறுத்த உறவினர்கள், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, ஐந்து பேரை அனுமதித்தனர்.

இந்நிலையில், சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுராஜின் உறவினர்களிடம், த.வெ.க., மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் பேச்சு நடத்தினார். இதை தொடர்ந்து சுராஜின் உடலை பெற்றுக்கொண்டனர்.

பார்த்திபன் கூறுகையில், “சுராஜ், எங்களின் தம்பி. என் குடும்பத்தில் இழப்பு ஏற்பட்டால் எப்படி செய்வேனோ, அதேபோல அவர் குடும்பத்துக்கும் செய்வேன். தற்போது அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன். சுராஜின் இரு குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்கிறேன். சுராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவையும் ஏற்கிறேன்,” என்றார்.

Advertisement