'மெட்ரோ' ரயில் கட்டுமானம் இடிந்து மும்பையில் ஒருவர் பலி; 3 பேர் காயம்
மும்பை: மஹாராஷ்டிராவில், 'மும்பை மெட்ரோ' ரயில் வழித்தட கட்டுமான பணியின் போது பாலத்தின் பக்கவாட்டு சுவர், சாலையில் சென்ற ஆட்டோ மீது இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மூன்று பேர் படுகாயம்அடைந்தனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் முலுந்த் பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று மதியம் 12:20 மணிக்கு திடீரென பாலத்தின் பக்கவாட்டு சுவர், சாலையில் சென்ற ஆட்டோ மற்றும் கார் மீது இடிந்து விழுந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆட்டோவில் பயணித்த ஒருவர் பலியானார்; மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்த நபர் ராம்தன் யாதவ் என தெரியவந்துள்ளது.
இதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உயிரிழந்த நபருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
விபத்திற்கான காரணம் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தனியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், கட்டுமான பணியின்போது மெத்தனமாக செயல்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.