இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: 'டி-20' உலக கோப்பையில் 'விறுவிறு'

கொழும்பு: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் (பிப். 15) 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இத்தொடரில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேசத்திற்கு ஆதரவாக, இப்போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் முதலில் அறிவித்தது. பின் ஐ.சி.சி., நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட, போட்டியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தது.
வருகிறார் அபிஷேக்: இந்தியா அணி கடந்த இரு போட்டியில் அமெரிக்கா, நமீபியாவை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. அபிஷேக் சர்மா (வயிறு வலி, அஜீரண பாதிப்பு) தேறியது பலம். நேற்று அரை மணி நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார். இன்று துவக்கத்தில் அபிஷேக்-இஷான் கிஷான் விளாச காத்திருக்கின்றனர். சாம்சன் நீக்கப்படலாம்.


சரியும் 'பேட்டிங்': இத்தொடரில் இந்திய 'பேட்டிங்' சீராக இல்லை. அமெரிக்காவுக்கு எதிராக 13 ஓவரில் 77/6 என தவித்தது. பின் சூர்யகுமார் (84 ரன்) கைகொடுக்க, மீண்டது. நமீபியாவுக்கு எதிராக கடைசி 11 பந்தில் 4 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் துவக்கத்தில் இஷான் கிஷான் (61), ஹர்திக் பாண்ட்யா (52) அசத்தியதால், வெற்றி எளிதானது. 'ஆல்-ரவுண்டர்' ஷிவம் துபே நம்பிக்கை அளிக்கிறார். இவர்கள் இன்றும் மிரட்டினால், இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறலாம்.


வலுவான 'சுழல்': பந்துவீச்சு பலமாக உள்ளது. 'வேகத்துக்கு' பும்ரா, 'சுழலுக்கு' வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் உள்ளனர். அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக 'ஸ்பின் ஆல்-ரவுண்டர்' தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தரை சேர்க்கும் திட்டம் உண்டு. ரிங்கு சிங்கை நீக்கிவிட்டு, இன்னொரு 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ் இடம் பெறலாம். ஆசிய கோப்பை பைனலில் (2025, துபாய்) பாகிஸ்தானை திணறடித்த குல்தீப், 4 விக்கெட் சாய்த்து, சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது சாதகம்.

பாபர் அனுபவம்: பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட நாளாக கொழும்புவில் விளையாடுவதால், இங்குள்ள சூழ்நிலையை அறிந்து வைத்திருப்பர். பேட்டிங்கில் சாஹிப்ஜாதா பர்ஹான், கேப்டன் சல்மான் அகா, அனுபவ பாபர் ஆசம், பகர் ஜமான், ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் கைகொடுக்கலாம். 'வேகத்துக்கு' ஷாகீன் ஷா அப்ரிதி, சல்மான் மிர்சா, 'சுழலுக்கு' அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக் என நான்கு 'ஸ்பெஷலிஸ்ட்' பவுலர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. உஸ்மான் தாரிக்கின் வினோதமான பந்துவீச்சு இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும்.
இதுவரை மோதல்


'டி-20' உலக கோப்பை அரங்கில் இரு அணிளும் 8 முறை மோதின. இதில் இந்தியா 7, பாக்., 1ல் வென்றன.

மழை வாய்ப்பு

கொழும்பு வானிலை மாறியுள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு.


* கொழும்பு, பிரேமதாசா ஆடுகளத்தில் 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்.

கைகுலுக்குல்... சிக்கல்

ஆசிய கோப்பை தொடரில் (2025, துபாய்) இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கி கொள்ளவில்லை. இதே நிலை தொடரலாம். இது பற்றி இந்திய கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''நாளை வரை பொறுத்திருங்கள். கிரிக்கெட் விளையாடவே வந்துள்ளோம்.
தேர்வில் சில சமயங்களில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கப்படும். இதற்கு பதில் அளிக்காமல் தவிர்க்க முடியாது. இது போல உஸ்மான் தாரிக் 'நிறுத்தி' பந்துவீசும் முறையும் புதுமையானது. இதை சமாளிக்க, உரிய பயிற்சி மேற்கொண்டுள்ளோம்,''என்றார்.


பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கூறுகையில்,''கிரிக்கெட் உணர்வுடன் அனைவரும் விளையாட வேண்டும்,''என்றார்.

Advertisement