உ.பி.,யில் 'ட்ரோன்'களுக்கான பிரத்யேக ஓடுபாதை அமைகிறது
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கையில், 'ட்ரோன்'கள் வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து, அதற்கென பிரத்யேக ஓடுபாதையை உத்தர பிரதேசத்தின் மீரட்டில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
900 ஏக்கர் நிலம் இதற்கு பதிலடி தரும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் படைகள், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தன. இதையடுத்து, இரு நாட்டுக்கு இடையே நீடித்த போரில், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் முக்கிய பங்காற்றின.
பாகிஸ்தான் எல்லைகளில் தாக்குதல் நடத்தவும், எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கவும், ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பிரத்யேக ஓடுதள பாதையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, டில்லியில் இருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள உத்தர பிரதேசத்தின் மீரட்டில் அதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிருந்து ட்ரோன்கள் மற்றும் ஆ.பி.ஏ., எனப்படும், 'ரிமோட்' வாயிலாக இயக்கப்படும் விமானங்களை ஏவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு, ராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமான 900 ஏக்கர் நிலத்தில், விமான தளம் அமைக்கும் பணியை, ராணுவத்தின் எல்லை சாலைகள் அமைப்பு துவங்கியுள்ளது. இந்த திட்டத்துக்காக 406 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன விமான தளத்தின் மையத்தில், 2,110 மீ., நீளத்திலும், 45 மீ., அகலத்திலும் ஓடுபாதை அமைக்கப்பட உள்ளது.
ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மட்டுமின்றி, சி - 295 மற்றும் சி - 130 ரக போக்குவரத்து விமானங்களும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஓடுபாதையில், இரவையும் பகலாக்கும் வகையிலான அதிக வெளிச்சக் கீற்றுகளை வழங்கக் கூடிய ஐ.சி.ஏ.ஓ., - சி.ஏ.டி., ரக விளக்குகள் பொருத்தப்படும்.
இந்த விளக்குகள், 200 அடி உயரம் வரை, வெளிச்சத்தை வழங்கி, விமானம் புறப்படவும், தரையிறங்கவும் உதவி செய்யும். விமானங்கள், ட்ரோன்களை நிறுத்தி வைக்க ஏதுவாக, 9,000 அடி நீளத்தில் இரண்டு 'ஹேங்கர்'கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுதளத்தில் இருந்து நாள்தோறும், 1,500 ஆளில்லா சிறிய ரக விமானங்களும், நான்கு பெரிய ரக ட்ரோன்களையும் பறக்க வைக்க முடியும்.
காலக்கெடு இந்த திட்டத்திற்கு 85 மாதங்கள் காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்க ஏழு மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, 18 மாதங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நீண்டகால செயல்பாட்டு தயார்நிலையை உறுதி செய்ய, 24 மாதங்கள் தேவைப்படும். பராமரிப்பு மேற்பார்வைக்கு 36 மாதங்கள் தேவைப்படும் என கூறப்படுகிறது.