உலக அளவில் இந்திய ரயில்வேக்கு 2ம் இடம்; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

புதுடில்லி: உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு போக்குவரத்தாக இந்திய ரயில்வே உருவெடுத்துள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; ரயில்வேத்துறையில் முறையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான சிறப்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026ம் ஆண்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய நடவடிக்கை என மொத்தம் உள்ள 52 வாரங்களில் 52 சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளோம். இந்தாண்டுக்கான முதல் நடவடிக்கையாக பயணிகளின் பயணகால சேவைகளை மேம்படுத்துவது தான்.

அதேபோல, நாடு முழுவதும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் விதமாக, கதி சக்தி திட்டத்தின் கீழ், சரக்குப் போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்தப்படும். ரயில்வேத்துறையில் உலகத் தரத்திலான தூய்மை மற்றும் சுகாதாரத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து ரயில்களிலும் இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement