ரேஷன் கடைகளில் தேங்கிய சாக்குகள் கொண்டு வந்த ஊழியர்கள் ஏமாற்றம்

காரைக்குடி: காரைக்குடி ரேஷன் கடைகளில் தேங்கி கிடந்த அரிசி சாக்குகளை, வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக வாடகை வாகனங்களுடன் மைதானத்திற்கு ரேஷன் கடை ஊழியர்கள் வந்த நிலையில் ஏற்றிச் செல்ல போதிய லாரிகள் வராததால் நீண்ட நேரம் காத்துக் கிடந்து திரும்பினர்.

தமிழகத்தில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடை மூலம் மக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு, சணல் சாக்குகளில் கொண்டு வரப்படுகிறது.

இந்த சாக்குகள் அவ்வப்போது கூட்டுறவுத்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு விற்கப்படும். தற்போது கூட்டுறவுத்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் சாக்குகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை மாவட்ட கடைகளில் 2 லட்சம் சாக்குகள் தேங்கி கிடக்கிறது.

நேற்று, காரைக்குடி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்த சாக்குகளை அந்தந்த கடை பணியாளர்கள் வாடகை வாகனங்கள் மூலம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மைதானத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் சாக்குகள் ஏற்றும் பணி நடந்தது. 2 லாரிகள் மட்டுமே வந்த நிலையில், 64 ஆயிரம் சாக்குகள் மட்டுமே ஏற்றப்பட்டது.

மற்ற பகுதிகளில் இருந்து சாக்குடன் வாகனங்கள் மாலை வரை காத்துக் கிடந்து திருப்பி அனுப்பப்பட்டது. இதனால், வாடகை பணம் வீணானதோடு, ரேஷன் கடை பணிகளும் முடங்கும் சூழல் நிலவியது.

மேலாண்மை இயக்குனர் பாலு கூறுகையில்:

ரேஷன் கடை சாக்குகளை விற்க குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ஆன்லைன் ஏலம் விடப்படும். சாக்குக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்றால் ஏலம் நடக்காது. தற்போது சீசன் டைம் என்பதால் ஏலம் முடிந்து சாக்குகள் அனுப்பி வைக்கப் படுகிறது.

டவுன் பகுதி ரேஷன் கடைகளில் உள்ள சாக்குகளை கொண்டு வர தகவல் தெரிவித்தோம். பெரிய லாரிகள் செல்லக்கூடிய சாலை அமைந்துள்ள கடைகளில் சாக்குகளை நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளப்படுகிறது.

குறுகலான சாலை உள்ள கடைகளுக்கு லாரிகள் செல்ல முடியாததால் நேரடியாக கொண்டு வந்து தர அறிவுறுத்தினோம். என்றார்.

Advertisement