கண்ணீர் துடைக்கும் கருணை உள்ளம்

தமிழகத்தில் 1975-1977 எமர்ஜென்ஸி அவசர காலத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இவரை பொறுத்தவரை அக்காலம் மறக்க முடியாத இளமை பருவமாக அமைந்தது.

சிவகங்கையின் குக்கிராமத்தில் பிறந்த இவர், பள்ளி படிக்கும் காலத்தில் தந்தையை இழந்தார். தாயார் அரவணைப்பில் வளர்ந்த போது ஒரு வேளை உணவு கிடைக்காமல் வாடினார். வறுமை சோகம் பல கி.மீ., துாரம் நடந்து சென்று பள்ளி, கல்லுாரி படிக்க துாண்டியது.

தான் அடைந்த கஷ்டங்களை பிறர் படக்கூடாது என்பதற்காக பல்வேறு உதவிகளை சத்தமின்றி செய்து வருகிறார் மதுரை கூடல்புதுாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக மேலாளர் விஸ்வநாததாசன். இதற்காக கருணை உள்ளங்கள் பவுண்டேஷன் எனும் தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். திருக்குறள் வளர்ச்சி பட்டறை என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி நடத்தி பரிசு வழங்கி ஊக்குவிக்கிறார்.

அவர் கூறியதாவது: அப்பா, அம்மா கல்வி அறிவு கிடைக்காமல் விவசாயத்தை நம்பி வாழ்ந்தனர். வறண்ட சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் அவ்வளவாக இருக்காது. ஒரு வேளை உணவு கூட கிடைக்காது. கடினமான சூழலிலும் பெற்றோர் என்னை படிக்க வைத்தனர். அந்த வைராக்கியத்தால் 10ம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன். பள்ளி நிர்வாகம் பரிசு வழங்கி ஊக்குவித்தது. பட்டப் படிப்பை முடித்து மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தபடி மாணவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

2000ல் கருணை உள்ளங்கள் பவுண்டேஷனை நண்பர்கள் உதவியுடன் துவங்கினேன். இது எனக்கும், நண்பர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கியது. 25 ஆண்டுகளாக அரசு பள்ளி ஏழை மாணவர்களை கண்டறிந்து பொருளாதார உதவி வழங்கி வருகிறோம். தேர்வு கட்டணம் செலுத்த முடியாதவர்களை அறிந்து உதவுகிறோம்.

திருக்குறளை மாணவர்களிடம் எடுத்துச் செல்ல திருக்குறள் பயிற்சி பட்டறை துவங்கினோம். குறள்களை விளக்கத்துடன் கூறும் மாணவர்களுக்கு கல்வி உபகரணம், ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவிக்கிறோம்.

மதுரை உலக தமிழ் சங்கத்தில் ஆன்றோர் பெருவிழாவில் திருக்குறள் போட்டி நடத்தினோம். பல ஆண்டுகளாக பல மாவட்டங்களில் இச்சேவை தொடர்கிறது. கொரோனா காலத்தில் ரோட்டோரம் வாழ்பவர்கள், வயதானவர்களுக்கு உணவு வழங்கினோம்.

கல்வி ஆலோசனை தேவைப்படுவோருக்கு உதவி, ஆலோசனை வழங்கி வருகிறோம். நண்பர்களின் உதவியும், எனக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வரையும் இச்சேவை தொடரும் என நம்பிக்கையுடன் கூறினார் விஸ்வநாததாசன்.

இவரை வாழ்த்த 98942 85162

Advertisement