ரூ.8,423 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு: வள்ளலார் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

74

சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.8,423 கோடி மதிப்புள்ள 8,106 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது என வள்ளலார் மாநாட்டை துவக்கிவைத்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் இன்று (பிப்., 15) வள்ளலார் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வள்ளலார் காட்டிய அறநெறிகளை பின்பற்றுபவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்துலக வள்ளலார் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

ரூ.8,423 கோடி



அறநிலையத் துறையில் திராவிட மாடல் அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது.
4,192 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.



@quote@12,937 திருக்கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் 29,479 திருப்பணி நடைபெற்று வருகிறது. ரூ.8,423 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 8,106 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. quote

திருக்கோவில்கள் சார்பில் 2800 திருமணங்கள் செய்து வைத்துள்ளோம். 19 திருக்கோவில்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடமை



வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழகத்தின் கடமை. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொல்லி உலகிற்கே 'தனிப்பெரும் கருணை' என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசும் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுகிறது. ஏழை மக்களின் பசியை 'பிணி' என்று சொன்னார் வள்ளலார். அந்த பிணியை நீக்கும் மருந்துதான் திராவிட மாடல். அதற்கு காலை உணவுத் திட்டம், தாயுமானவர் திட்டம் உள்ளிட்டவைதான் சான்று.

புனரமைப்பு




வள்ளலார் நகர் பஸ் நிலையத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைத்துள்ளோம். வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லத்தை புனரமைத்தோம்.

* வள்ளலாரின் 200வது பிறந்த நாள்


* தருமசாலை நிறுவப்பட்ட 156வது ஆண்டு துவக்கம்

* ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு ஆகியவற்றை இணைத்து அக்.,2002 ல் இருந்து அக்.,2023 வரை தொடர்ச்சியாக ஓராண்டு முப்பெரும் விழாக்களை கொண்டாடினோம்.



அதோடு வள்ளலார் 200 என்ற பெயரில் லச்சினை, தபால் தலை, சிறப்பு மலர் வெளியிட்டு அன்னதானம், மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம்.


தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் மூன்று நாட்கள் அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றைக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்டி திறந்துவைத்து இருக்கிறோம். இந்தச் சாதனைகளின் தொடர்ச்சியாகத்தான் வள்ளலார் பற்றாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரின் உயரிய கருத்துகளை வாழ்க்கை நெறிகளை, உலககெங்கும் போற்றிடும் நோக்கத்துடன் இன்று அனைத்து உலக வள்ளலார் மாநாடு நடத்தப்படுகிறது.

@quote@வள்ளலாரை போற்றுவதுடன் நமது பணி நின்றுவிடக்கூடாது. அவருடைய வழிமுறைகளை பின்பற்ற இந்த மாநாடு வழி வகுக்க வேண்டும். quote



சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும். அந்த ஆய்வு மையம் இந்து சமய அறநிலையத்துறையின் வளாகத்தில் அமைக்கப்படும். மற்ற கோரிக்கைகளும் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும்.



நமது பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள். வள்ளலார் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்க கூடாது. பிரிவினை சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல், அன்பும், பண்பும், அறனும், கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement