'ஐந்து ரூபாய் பரோட்டா'வுக்கு 5 பவுன் சங்கிலி மாஸ்டருக்கு 'மாஸ்' காட்டிய ரஜினி
'பல கோடி ரசிகர்களும், ரூ.கோடிக் கணக்கில் பணம் வைத்திருப்போரும் அவரைக் காண தவம் கிடக்கின்றனர். அப்பேற்பட்ட ஒருவர் என்னை அழைத்து கவுரவித்ததை நினைக்கும்போது உடல் புல்லரிக்கிறது. இமயமலைக்கு வழிபாட்டுக்கு செல்லும் தலைவனை அவரது இல்லத்திற்கே சென்று தரிசித்தது எனது புண்ணியமே'' என நெஞ்சம் உருக பேசுகிறார் மதுரை வண்டியூரைச் சேர்ந்த சேகர் என்ற ரஜினிசேகர்.
'ஐந்து ரூபாய் பரோட்டா' சேகர் என்றால் சுற்றுவட்டாரத்தினருக்கு அத்துப்படி. ஆண்டுக்காண்டு விலைவாசி எப்படி உயர்ந்தாலும், சிறிய இடத்தில் அமைந்துள்ள இவரது 'ஐந்து ரூபாய் பரோட்டா' ஓட்டலில் இட்லி, பரோட்டா, காபி, வடை விலை ரூ.5 தான். எந்த விலைவாசியும் இவரை பாதிக்காதது வியப்பே.
மிக சாமானியனாக வாழ்க்கை நடத்தும் இவரிடம் பேசியபோது நம்மை பிரமிக்க வைக்கிறார். துாத்துக்குடியில் கீழசண்முகபுரத்தைச் சேர்ந்த சேகர், சிறுவயது முதல் ரஜினி ரசிகர். ரஜினியின் ஸ்டைலால் கவரப்பட்டு அவரது படங்கள் என்றால் முதல்நாள் முதல்காட்சிக்கு செல்ல வேண்டும் என்ற துடிப்பு இன்றும் உள்ளது. மூன்றாம் வகுப்பு வரை படித்த அவர் பலஆண்டுகளுக்கு முன்பே மதுரை வந்து ஓட்டல்களில் பணியாற்றியுள்ளார்.
2006ல் இவரே தனியாக ஓட்டல் துவங்கி இட்லி, பரோட்டா, வடை, டீ என விற்றுள்ளார். அப்போதும் அவற்றின் விலை ரூ.5 தான். விலையிலும், தரத்திலும் ஒருபோதும் மாற்றமி ல்லை. அதேசமயம் தோசை, பூரி, பொங்கல் போன்றவை இன்றும் ரூ.20 தான். இந்த உணவை பள்ளிப் பிள்ளைகள் ரூ.10க்கு கேட்டாலும் மறுக்காமல் கொடுக்கிறார். அதுவும் ரஜினி பிறந்தநாள் எனில் மாணவர்களுக்கு அன்று முழுவதும் இலவசமே.
சேகர் கூறுகிறார்: இந்தப் பகுதியில் சாமானிய வீட்டுப் பிள்ளைகள் அதிகம் உள்ளனர். அவர்களின் வசதிக்காக விலையை பார்ப்பதில்லை. தினமும் குறைந்தளவே லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என்றுதான் தொழில் செய்கிறேன். வீடு, கடை எல்லாமே வாடகைதான். தினமும் ரூ.500 வரை கிடைக்கும். இதை வைத்து மகள் ஆர்த்திஸ்ரீயை பி.காம்., படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளேன்.
எனது எண்ணங்களுக்கு மனைவி ராஜேஸ்வரி உறுதுணையாக உள்ளார். தலைவரின் (ரஜினி) பிறந்தநாளுக்கு மைக்செட், விழாக்கள் என செலவழிப்பதில்லை. அத்தொகையை உணவாக மாணவர்களுக்கு, ஏழை, எளியோருக்கு வழங்கி விடுவேன்.
எனது செயல்பாட்டை யாரோ யுடியூப்பில் பகிர்ந்துள்ளனர். அதை டுவிட்டரில் பார்த்துள்ளார் ரஜினி. கடந்த ஜன., 24ல் எனக்கு வந்த அலைபேசி அழைப்பில், 'ரஜினி உங்களை பார்க்க விரும்புகிறார்' என்றவுடன் உலகமே எனது காலில் இருந்து நழுவுவது போல உணர்ந்தேன்.
எனது மனைவி, மகள், மருமகன், பேரனுடன் சென்னை வர, ஊருக்கு திரும்ப ரயில் டிக்கெட் பெற்றுத்தந்தனர். சென்னையில் 2 நாட்கள் தங்க ஓட்டல், சுற்றிப் பார்க்க கார் ஏற்பாடு என திக்குமுக்காட வைத்தனர். நாங்கள் சென்னை சென்று ரஜினி வீட்டில் அலுவலகம் போன்ற அறைக்குள் நுழைந்ததும், அவரே, 'வாங்க சேகர்' என கூப்பிட்டார். குடும்பத்துடன் அவரது காலில் விழுந்துஆசி பெற்றோம். என்னை தொட்டுத் துாக்கி எனது பேரனை கொஞ்சினார். எனது மனைவி, மகள், மருமகனிடம் நலம்விசாரித்து பேசினார்.
எங்களை அமரச் செய்து காபி தந்து, பட்டுவேட்டி, சேலை, துணிமணிகள், பாபா படம் தந்து உபசரித்தவர், எதிர்பாராத வகையில் 5 பவுன் தங்கச் சங்கிலியை எனக்கு பரிசளித்தார். எல்லாம் கனவு போலவே உள்ளது. ஐந்து ரூபாய்க்கு பரோட்டா உட்பட டிபன் வழங்குவதை வியப்புடன் கேட்டு பாராட்டினார். சாமானியர்களுக்கு அவர் உதவுவது பலருக்கு தெரியாது. அதுபோல அவரது ரசிகனான நானும் உதவும் எண்ணத்துடன் இத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறேன். அதற்கான அங்கீகாரம் இப்படி கிடைக்கும் என நினைக்கவில்லை.
இந்தச் செய்திகள் பரவியதும் இப்போது பல ரஜினி ரசிகர்கள் என்னைத் தேடி வருகின்றனர். என்னுடன் நின்று 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர் என்றார்.
இவரை வாழ்த்த 93641 08030ல் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ
-
திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
-
காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்