சுனைலிங்கம் ஜலகண்டேஸ்வரர் தரிசனம்

புதுக்கோட்டை: நார்த்தாமலையில், இயற்கையாக தேங்கி நிற்கும் சுனை நீரை வெளியேற்றி ஆண்டுக்கு ஒருமுறை மகா சிவராத்திரியை முன்னிட்டு, சுனைலிங்கம் ஜலகண்டேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்தில் அமைந்துள்ள மேலமலையில் ஏறத்தாழ 1800 ஆண்டுகள் பழமையான 20 அடி சுனைக்குள் இருக்கும் இறைவனுக்கு நாரத மாமுனிவர் மற்றும் தலைவீரி சிங்கன் எனும் அரும்பெறும் முனிவர்களாலும் சித்தர்களாலும் பூஜிக்கப்பட்ட ஜூரஹரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன் எப்பொழுதும் நீருக்குள் வாசம் செய்து, வருடத்திற்கு ஒருமுறை மகா சிவராத்திரி அன்று மட்டும் சுனை நீரை வெளியேற்றி பக்தர்களுக்கு காட்சிதருபவராக திகழ்கிறார்.



இக்கோவிலில் புதுக்கோட்டை மன்னர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டு பின்பு நார்த்தாமலை கிராம பொதுமக்களால் தொடர்ச்சியாக பூஜைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல் குடைவரை கோவிலாக திகழ்கிறது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது.


இதன் காலம் ஏறக்குறைய 1800 வருடங்கள் பழமையானது. இந்த கோவிலில் இறைவனின் இடது பக்கத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் எங்கும் இல்லாத ஏழு சிவ ஆலயங்கள் மற்றும் ஏழு மலைகளாலும் சூழப்பட்டு நீர்வளமும், நில வளமும், செந்நெல்வளமும் செழித்தொங்கி அமையப்பெற்றதே நார்த்தாமலை என்னும் இவ்வூரின் சிறப்பாகும்.


வரலாற்று சிறப்புமிக்க விஜயாலயசோழீஸ்வரம் கோவிலுக்கு செல்லும் வழியில் இரண்டு மலைகளின் சரிவில் இயற்கையாக தேங்கி நிற்கும் சுனை நீர் சூழ்ந்துள்ள பாறை சரிவில் சுனைலிங்கம் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் நீருக்குள் இருந்து பக்தர்களை அருள் பாலித்து வருகிறார்.


இந்த சுனையில் உள்ள நீரை வெளியேற்றி வழிபட ஹிந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை, தொல்லியல் துறை அகிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று மகா சிவராத்திரி அன்று மட்டும் அப்பகுதி பக்தர்களால் சுனையில் உள்ள நீரை அப்புறப்படுத்தப்பட்டு அன்று நாள் முழுவதும் ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெறும்.


அதன்படி, மகா சிவராத்திரியை முன்னிட்டு சுனைலிங்கம் அமைந்துள்ள சுனையில் உள்ள நீர் முழுவதும் அகற்றப்பட்டு பக்தர்கள் சுனையில் இறங்கி வழிபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதில், சுனைலிங்கம் ஜலகண்டேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், 48 நாட்களுக்குள் மழை பெய்து இந்த சுனை மீண்டும் நிரம்பிவிடும் என்பது ஐதிகம். ஆண்டு முழுவதும் சுனை நிருக்குள் சிவலிங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement