2026-27ல் தமிழக அரசின் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும்!

67

சென்னை: வரும் 2026-27ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:

* சோழர் அருங்காட்சியகம், நொய்யல் அருட்காட்சியகம்ல எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெண்கல அருங்காட்சியகம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாடு அருங்காட்சியகம் ரூ.287 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

* இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.

* தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

* தூய்மை பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

* தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற ரூ.327 கோடியில் பணிகள் நடக்கின்றன. மதுரை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்றி அமைக்க ரூ.229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

* அம்பேத்கர் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 385 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

* சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* 19 முக்கிய கோவில்களில் ரூ.1,770 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

* 2024ம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழகம் வந்துள்ளனர்.

* 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை புனரமைத்து பாதுகாக்கும் நோக்கில் அரசு நிதி ரூ.425 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 84 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.

* இந்தியாவிலேயே முதல் முறையாக தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.214 கோடியில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

* மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி மானியங்கள் ரூ.24 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

* வரும் நிதியாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


* பொங்கல் பரிசு, மகளிர் உரிமை தொகை திட்டத்தால் அரசுக்கு ரூ.10,849 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.


வருவாய்ப் பற்றாக்குறை



2026-27ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2027-28ம் ஆண்டில் 42,964.61 கோடி ரூபாயாக குறையும். அதன் தொடர்ச்சியாக 2028-29ம் ஆண்டில் 35,115.33 கோடி ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும்.

கடன்கள்



மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2026-27ம் ஆண்டில் மாநில அரசு 1,79,809.65 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 60,413.42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதனால் மாநில அரசின் கடன் 2026-27ம் நிதியாண்டில் 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். நடப்பாண்டில் கடன் ரூ.9.52 லட்சம் கோடியாக இருக்கிறது. 2026-27ம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 26.35 சதவீதம் ஆகும்.


@block_P@

புதிய திட்டங்கள் இல்லை!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுவாக, இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும். இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். எனவே, இடைக்கால பட்ஜெட்டில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.block_P

Advertisement