வாக்குறுதி அளித்து விட்டு அதை காப்பாற்றாமல் இருப்பது சரியா? தமிழக அரசிடம் அங்கன்வாடி ஊழியர்கள் கேள்வி

கோவை: '500 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் கூறுகிறார்; ஆனால், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அளித்த 313வது வாக்குறுதியை மறந்துவிட்டாரா?' என போராட்ட களத்தில் ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை, அரசு பணியாளர்களாக அங்கீகரித்து, காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை வழங்கப்படும் என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவையில் 16வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 18 வட்டாரங்களில், 10 வட்டாரங்களை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசின் பிடிவாதப் போக்கைக் கண்டிக்கும் வகையில், நேற்று தங்களது கைகளில் உணவு தட்டுகளில் கரண்டியால் தட்டி, நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்ட குழுவினர் கூறுகையில், 'கடந்த தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளில் 500ஐ நிறைவேற்றிவிட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எங்களுக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது? எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதரவு தெரிவித்த தி.மு.க. தற்போது ஆளும் கட்சியான பின்பு கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவது நியாயமல்ல. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது. அடுத்தகட்டமாக சாலை மறியலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

Advertisement