'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி

திருப்பூர்: கடந்த இரண்டு ஆண்டுகளை போல நடப்பாண்டும், 'நீட்' தேர்வுக்கு பின், பொதுத்தேர்வு முடிவு வெளியாக உள்ளதால், பெற்றோர், மாணவ, மாணவியர் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த, 2023ல், 'நீட்' மருத்துவ நுழைவுத்தேர்வு, மே7ல் நடந்தது. ஒரு நாள் முன்னதாக, பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியாக இருந்தது. பொதுத்தேர்வு முடிவை அறிந்த மறுநாளே மாணவர் 'நீட்' தேர்வு எழுத மன ரீதியாக தயாராவது சிரமம் என்ற கருத்து நிலவியதால், தேர்வு முடிவை தமிழக அரசு இரண்டு நாள் ஒத்திவைத்து மே8-ல் வெளியிட்டது.

கடந்த 2024ல் இந்த சிரமம் இல்லை. முதல் நாள் (மே 5) 'நீட்' தேர்வும், மறுநாள் (மே 6) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவும் வெளியானது. கடந்தாண்டு, மே 4ல் 'நீட்' தேர்வு நடந்து முடிந்தது; நான்கு நாட்கள் கடந்து, மே, 8ல் பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, மே, 8ல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. கடந்த, 8ம் தேதி, தேசியதேர்வுகள் முகமை, 2026ம் ஆண்டுக்கான 'நீட்' தேர்வு மே,3ல் நடக்குமென அறிவித்தது.

நடப்பாண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் முன், 5 நாள் முன்பே 'நீட்' தேர்வு நடத்தி முடிப்பதால், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் நிம்மதியடைந்துள்ளனர்.

கடந்த, 9ல் துவங்கிய பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, 14ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மார்ச், 2ல் துவங்கும் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், மார்ச், 8ம் தேதி வரை 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement