நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை

கோவை: நகை அடகுக் கடை ஷட்டரை உடைத்து, 40 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் வசந்தா நகரில் ரமேஷ்குமார், 48 என்பவர் வசித்து வரு கிறார். இவர் வீட்டின் முன் புறம் ஜுவல்லரி மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

அடகு கடையில் பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை வைத்திருந்தார். நேற்று முன்தினம் மஹா சிவராத்திரி என்பதால் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

ரமேஷ்குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெள்ளலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்.

கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவு ரமேஷ்குமார் வீடு திரும்பினார். அப்போது நகைக்கடையின் பின்பகுதியில் உள்ள ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார். கடைக்குள் சென்று பார்த்த போது, தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

புகாரையடுத்து, சிங்காநல்லுார் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்த சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

விசாரணையில், கடையில் இருந்து, 40 பவுன் தங்க நகைகள், ஐந்து கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் கூறுகையில்,'நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சம்.

கடையில் பணி புரிந்த முன்னாள் ஊழியர்கள், கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன' என்றனர்.

Advertisement