பா.ஜ., அரசுக்கு எதிராக விளம்பரம்: ராகுல் மீதான வழக்கு தள்ளுபடி

பெங்களூரு: பா.ஜ., அரசுக்கு எதிராக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்ததாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது பதிவான அவதுாறு வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை, காங்கிரஸ் முன்வைத்தது. அரசு துறையில் உள்ள பதவிகளுக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது என்பது தொடர்பாக, கன்னடம், ஆங்கில நாளிதழ்களுக்கு காங்கிரஸ் முதல் பக்க விளம்பரம் கொடுத்தது. இந்த விளம்பரத்தை ராகுல் தனது, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டார்.


இது குறித்து பா.ஜ., - எம்.எல்.சி., கேசவ பிரசாத் அளித்த புகாரில், ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் ராகுல், சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவானது.
மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுலுக்கு முன்ஜாமினும் கிடைத்தது. தன் மீது பதிவான வழக்கை தள்ளுபடி செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு செய்தார். இம்மனுவை நீதிபதி சுனில் தத் யாதவ் விசாரித்தார்.


ராகுல் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, ''பா.ஜ., அரசுக்கு எதிராக கொடுத்த விளம்பரத்தை, ராகுல் ரீ டுவிட் செய்தது தொடர்பான ஆவணங்கள், அந்த பதிவை எத்தனை பேர் பார்த்தனர் என்பது பற்றி, மனுதாரர் தரப்பு எந்த ஆவணங்களையும் இங்கு சமர்பிக்கவில்லை. விளம்பரத்தில் பா.ஜ., என்று பெயர் குறிப்பிடவில்லை. அரசு என்று தான் குறிப்பிடப்பட்டு இருந்தது,'' என்றார்.


மனுதாரர் தரப்பு வக்கீல் வினோத் குமார் வாதிடுகையில், ''விளம்பரத்தை ரீ டுவிட் செய்ததை ராகுல் ஒப்பு கொண்டார். ஆனாலும் அது குற்றம் இல்லை என்று கூறுகிறார்.
''விசாரணையில் தான் அது குற்றமா, இல்லையா என்பது நிரூபிக்கப்பட வேண்டும். நேரடியாக இல்லாவிட்டாலும் அவதுாறு பரப்புவது குற்றம் தான்,'' என்றார்.


இருதரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி நிறைவு பெற்றது. பிப்ரவரி 17ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி கூறி இருந்தார். நேற்று தீர்ப்பு கூறுகையில், 'மனுதாரர் மீதான விசாரணை நடவடிக்கையை தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வது போன்றது' என்று கூறிய நீதிபதி, ராகுல் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement