நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

10

நமது நிருபர்




நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என பாமக நிறுவனர் ராமதாசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும், 'நானே பா.ம.க., தலைவர்' என அறிவித்து, தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். கட்சி யாருக்கு சொந்தம் என்பதில், முறையான ஆவணங்கள் அடிப்படையிலேயே அன்புமணிக்கே சொந்தம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் கூறிய விளக்கத்தை டில்லி ஐகோர்ட் ஏற்றுக்கொண்டது.



இந்த சூழலில், மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரியும், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரியும் ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை பேச்சை மகன் கேட்பதில்லையா என தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, ''தந்தை சொல்லை மகன் கேட்பதில்லை'' என ராமதாஸ் தரப்பு பதில் அளிக்கப்பட்டது.


இதன் பிறகு, தேர்தல் கமிஷன் தரப்பில், ''அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் பாமக விவகாரத்தில் தலையிட முடியாது. மாம்பழ சின்னத்தை முடக்குவது குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது'' என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு:
* ஏற்கனவே உள்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மீண்டும் ஐகோர்ட்டை அணுகியது ஏன்?



* உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் கமிஷனை அணுகலாம்.


* நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement