தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு ஜவுளி துறையினர் பாராட்டு

கரூர்: தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு ஜவுளி துறையினர் பாராட்டு தெரிவித்தும், அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர், கோபாலகிருஷ்ணன்: தமிழ்நாடு அரசின், 2026-27 இடைக்கால பட்ஜெட்டில், ஜவுளி மற்றும் காதி துறைக்கு, 1,943 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதை பாராட்டுகிறோம்.


தொழில்நுட்ப மற்றும் ஜவுளிகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் திட்டமான, 6 கோடி ரூபாய் மதிப்பில்
ஜவுளி பொருட்கள் சோதனை ஆய்வகத்தின் அறிவிப்பு சிறந்த அம்சமாகும்.

கரூர் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர், குப்புராவ்: வரும் 2026-27ம் ஆண்டில் தமிழக அரசின் கடன், 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


நிதி நிலையை சீரமைக்க நிபுணர் குழு அமைத்த பிறகு, அரசு அதிக கடன் வாங்கியுள்ளது. நிதி பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே சென்றால் மக்கள் மற்றும தொழில் துறை மீது வரிச்சுமை ஏற்படும். கொசுவலை போன்ற தொழில் நலிடைவந்து வரும் நிலையில் அதை மீட்க எந்த திட்டமும் இல்லை. மின்சார கட்டணம் உயர்வு போன்றவைகளால் தொழில் துறை சிக்கலில் உள்ளது.


காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர், ராஜாராம்: தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருக்கிறது. அதே சமயம் அனைத்து துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வழக்கமான நடவடிக்கையாகும். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பல செயல்பாட்டுக்கு வரவில்லை. வேளாண் இடைக்கால பட்ஜெட்டில், இதுவரை அரசு செய்த திட்டங்களை பற்றியே கூறப்பட்டுள்ளது. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை, கடன் தள்ளுபடி உள்பட எந்த அறிவிப்புகளும் இல்லை.


தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர்

மலைக்கொழுந்தன்: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தோழி விடுதி, அன்புக்கரங்கள் போன்ற திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவது, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான, கூடுதல் உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு, பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அரசு மடிக்கணினி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை எதிர்பார்த்து இருந்தோம்.


இது குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமே.

கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் சங்க தலைவர்,

தனபதி:

தமிழக இடைக்கால பட்ஜெட்டில், தொழில்துறை, அரசு ஊழியர்கள், மகளிர் நலம், போக்குவரத்து துறை, மீனவர் நலம் என அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்பு வந்துள்ளது. தொழில்துறைக்கு, 4,482 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததுடன் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், 12 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிறு, குறு, நடுத்தர தொழில் மேலும் வளர்ச்சி அடையும்.

Advertisement