கோவிட் இழப்பீடு கோரி 36 பிரிட்டன் பல்கலை.க்கு நோட்டீஸ்: இந்தியர்கள் உள்பட 1.7 லட்சம் மாணவர்கள் சட்ட நடவடிக்கை
லண்டன்: கோவிட் காலகட்டங்களில் கட்டணம் வசூலித்தபடி, நேரடியாக வகுப்புகளை நடத்தாதது குறித்து இழப்பீடு கோரி, 36 பிரிட்டன் பல்கலைகழங்கள் மீது நுாற்றுக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட 1.7 லட்சம் மாணவர்கள் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், நுகர்வோர் உரிமைச் சட்டத்தின் கீழ், கல்வித் தரம் பாதிக்கப்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்ட போதிலும், சர்வதேச மாணவர்களிடம் சுமார் £40,000 ( ரூ.40 லட்சம்) வரை முழு கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, 6,000 மாணவர்களுடன் நீதிமன்றத்திற்கு வெளியே ரகசியமாக சமரச ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் இந்தியாவில் வசிக்கும் 30 இந்திய மாணவர்கள் அடங்குவர்.
இந்தச் சமரசத்தைத் தொடர்ந்து, மாணவர்கள் குழு அமைப்பு மேலும் 36 பல்கலைக்கழகங்களுக்கு முதற்கட்ட நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.ஒட்டுமொத்தமாக 20,000 சர்வதேச மாணவர்கள் இதில் இணைந்துள்ளனர். இதில் இந்தியாவில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2018 முதல் 2022 வரையிலான பாதிப்புகளுக்காக இழப்பீடு கோரியுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு கூடுதல் தொகை இழப்பீடாக கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.