'ஒலிம்பிக்' சிக்கலில் ஆஸி.,

புதுடில்லி: வரும் 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் (1900) முதல் மற்றும் கடைசியாக கிரிக்கெட் போட்டி நடந்தது. தற்போது 126 ஆண்டுக்குப் பின், வரும் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் கிரிக்கெட் ('டி-20') சேர்க்கப்பட்டது. இதில் 6 அணிகள் மட்டும் பங்கேற்க உள்ளன.
இதன் படி, தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் அமெரிக்கா, விளையாட உள்ளது. கண்டங்கள் அடிப்படையிலான தரவரிசையின் படி, மீதமுள்ள 4 அணிகள் தேர்வாகும். 6வது அணி, தகுதிச்சுற்றில் முடிவில் தெரியவரும்.
இதன் படி, நடப்பு உலக கோப்பை தொடருக்கு முன், ஓசியானா பிரிவில் நியூசிலாந்தை விட, தரவரிசையில் முன்னிலையில் இருந்தது ஆஸ்திரேலியா. தற்போது, லீக் சுற்றுடன் வெளியேறியதால், நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
ஒருவேளை, அரையிறுதிக்கு முன்னேறினால், தரவரிசை அடிப்படையில் 'டாப்-4' இடம் பெற்று, நியூசிலாந்து அணி, ஒலிம்பிக் வாய்ப்பை தட்டிச் செல்லலாம். கடைசி, 6 வது அணி, கண்டங்களுக்கு இடையில் நடக்கும் தகுதிச்சுற்று வழியாக தேர்வு செய்யப்பட உள்ளது.
இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஒலிம்பிக் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முயற்சி செய்த ஆஸ்திரேலிய அணிக்கு இது பின்னடைவாக அமையலாம்.

Advertisement