இந்திய அணிக்கு நான்காவது வெற்றி: துபே, வருண் அசத்தல்
ஆமதாபாத்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ஷிவம் துபே, வருண் சக்ரவர்த்தியின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி, 4வது வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்த இந்திய 'லெவன்' அணியில் குல்தீப் யாதவ், துணை கேப்டன் அக்சர் படேலுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றனர். முதன்முறையாக 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்: இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் ஜோடி துவக்கம் தந்தது. முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்யன் தத் 'சுழலில்' அபிஷேக் (0) போல்டானார். லோகன் வான் பீக் வீசிய 2வது ஓவரில் திலக் வர்மா ஒரு சிக்சர், இஷான் கிஷான் ஒரு பவுண்டரி அடிக்க 15 ரன் கிடைத்தது. கோலின் ஆக்கர்மன் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் இஷான் கிஷான். இரண்டாவது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்த போது ஆர்யன் தத் பந்தில் இஷான் கிஷான் (18) போல்டானார்.
சூர்யகுமார் நம்பிக்கை: அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், கைல் கிளீன் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 'பவர்-பிளே' ஓவரின் (1-6) முடிவில் இந்தியா 51/2 ரன் எடுத்திருந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 30 ரன் சேர்த்த போது வான் பீக் பந்தில் திலக் (31) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய சூர்யகுமார், பாஸ் டி லீட் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். அபாரமாக ஆடிய ஷிவம் துபே, கோலின் ஆக்கர்மன் வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 19 ரன் கிடைத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்த போது சூர்யகுமார் (34) அவுட்டானார்.
துபே விளாசல்: வான் டெர் மெர்வி வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட ஷிவம் துபே, லோகன் வான் பீக் வீசிய 17வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, 25 பந்தில் அரைசதம் எட்டினார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஹர்திக் பாண்ட்யா, கைல் கிளீன் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்த போது வான் பீக் பந்தில் துபே (66 ரன், 6x6, 4x6) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய வான் பீக் பந்தில் பாண்ட்யா (30 ரன், 3x6) வெளியேறினார்.
இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்தது. ரிங்கு சிங் (6) அவுட்டாகாமல் இருந்தார். நெதர்லாந்து சார்பில் வான் பீக் 3, ஆர்யன் தத் 2 விக்கெட் கைப்பற்றினர்.
வருண் அபாரம்: கடின இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் (24), மேக்ஸ் ஓ'தவுத் (20) ஜோடி ஓரளவு கைகொடுத்தது. பின் இணைந்த பாஸ் டி லீட், கோலின் ஆக்கர்மன் ஜோடி நம்பிக்கை தந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது வருண் 'சுழலில்' ஆக்கர்மன் (23) சிக்கினார். ஷிவம் துபே 'வேகத்தில்' பாஸ் டி லீட் (33) வெளியேறினார். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (15) நிலைக்கவில்லை. பின் இணைந்த கேச்செட், நோவா குரோஸ் ஜோடி ஆறுதல் தந்தது. ஏழாவது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்த போது துபே பந்தில் கேச்செட் (26) அவுட்டானார்.
நெதர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. குரோஸ் (25), வான் பீக் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் வருண் 3, துபே 2 விக்கெட் கைப்பற்றினர்.
'டக்-அவுட்' சோகம்
அமெரிக்கா (0), பாகிஸ்தானுக்கு (0) எதிராக ஏமாற்றிய இந்தியாவின் அபிஷேக் சர்மா, நேற்றும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அதிக முறை 'டக்-அவுட்' (3) ஆன வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் அபிஷேக். முதன்முறையாக 'டி-20' உலக கோப்பையில் விளையாடும் அபிஷேக், தனது ரன் கணக்கை துவக்காதது சோகம்.
* சர்வதேச 'டி-20' அரங்கில் இந்த ஆண்டு அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் அபிஷேக். இதுவரை 5 முறை, ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார்.
திலக் '31'
அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தானுக்கு எதிராக தலா 25 ரன் எடுத்த இந்தியாவின் திலக் வர்மா, முதன்முறையாக 25 ரன்னை கடந்தார். இவர், 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மேலும்
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்
-
வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஆதாரம் கோரும் உயர்நீதிமன்றம்
-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மயக்கம்
-
ராமநாதபுரத்தில் திரியும் குரங்குகளுக்கு ஆபத்து வனத்துறை நடவடிக்கை தேவை
-
வயல்களில் ஆட்டு கிடைக்கு பயன்படும் செம்மறி ஆடுகள்
-
காசா அமைதி திட்டம் பற்றி பிரதமர் மோடியிடம் பேசினேன்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்