சரக்குகள் கையாளும் முனையங்கள் 500 ஆக உயர்த்த ரயில்வே இலக்கு

சென்னை: ரயில்வேயில், 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், சரக்குகள் கையாளும் முனையங்களை, 500 ஆக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், ரயில்வேயில் தனியார் பங்களிப்போடு, புது திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

சரக்குகளை கையாளும் வகையில், ரயில்வே 'ஷெட்' அமைப்பது, புதிய சரக்கு முனையம் அமைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. முக்கிய நகரங்களில் இருந்து, வாகனங்கள், ஆடைகள், மோட்டார் உதிரிப் பொருட்கள், சிமென்ட், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள் கையாளப்படுகின்றன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சரக்கு ரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த, 'கதி சக்தி' திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடு முழுதும், தற்போது, 124 இடங்களில் சரக்கு ரயில் முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொருட்களை தடையின்றி எடுத்துச் செல்ல, போதிய கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், தொழில் வளர்ச்சி ஏற்படுவதோடு, தெற்கு ரயில்வேக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதற்கிடையே, சரக்கு ரயில் முனையங்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 500 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement