மொபைல் டேட்டாவில் செய்தது போல் ஏஐ தொழில்நுட்பத்திலும் புரட்சி செய்வோம்: முகேஷ் அம்பானி

8


புதுடில்லி: ''ரிலையன்ஸ், ஜியோ ஆகிய நிறுவனங்கள் ரூ.10 லட்சம் கோடி ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும். மொபைல் டேட்டாவில் செய்தது போல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திலும் புரட்சியை ஏற்படுத்துவோம்'' என தொழிலதிபர் முகேஷ் அம்பானி உறுதி அளித்துள்ளார்.

டில்லியில் நடந்த ஏஐ உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது: சிறந்த ஏஐ தொழில்நுட்ப செயலி இதுவரை உருவாக்கப்படவில்லை. சிறப்பான ஏஐ தொழில்நுட்ப சகாப்தத்தை உருவாக்க முடியும். ஒரு பக்கம் அதிக செலவு செய்து ஏஐ தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாக இருக்கிறது. மற்றொரு பக்கம் குறைந்த செலவிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது.



ரிலையன்ஸ், ஜியோ ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு தொடங்கி அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி செயற்கை நுண்ணறிவு முதலீடு செய்யும். மொபைல் டேட்டாவில் செய்தது போல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திலும் புரட்சியை ஏற்படுத்துவோம். இது முதலீடு அல்ல. வளர்ச்சி அடைந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் மூலதனம். ஜியோ இந்தியாவை இணைய சகாப்தத்துடன் இணைத்தது.


இப்போது அது ஏஐ தொழில்நுட்பத்திலும் நடக்கும். மக்கள் அனைவருக்கும், பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்கும், சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு முயற்சியிலும் ஏஐ தொழில்நுட்பம் பயன்பாட்டை உருவாக்கும். நம்பகத்தன்மை வாய்ந்த, மலிவு விலையில் ஏஐ தொழில்நுட்பத்தை அணுக ஜியோ வழிவகை செய்யும். இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.

Advertisement