ஏஐ எதிர்காலத்தை இந்தியா - பிரான்ஸ் இணைந்து கட்டமைக்கும்; அதிபர் மேக்ரான்

புதுடில்லி: ஏஐ எதிர்காலத்தை இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து கட்டமைக்கும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்து வரும் சர்வதேச ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மாநாட்டின் இன்றைய நிகழ்வில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், எஸ்தோனியா அதிபர் அலர் கரிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஏஐயின் எதிர்காலத்தை இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து கட்டமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது; 10 ஆண்டுக்கு முன்பு, இந்தியாவில் 140 கோடி மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியாது என்று உலக நாடுகள் கூறின. ஆனால், அது தவறு என்பதை இந்தியா தற்போது நிருபித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய நாடுகள் மட்டுமே கையாள முடியும் என்று சிலர் கூறினர். ஆனால், இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் எங்களின் அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டவர்கள் மாறுபட்ட வழியைக் கொண்டுள்ளனர்.

புதுமையையும், தொழில்நுட்பத்தையும், மனிதாபிமானத்தையும் ஒருசேர இணைப்பவர்களால் மட்டுமே ஏஐயின் எதிர்காலம் கட்டமைக்கப்படும். அந்த வகையில், இந்தியாவும், பிரான்ஸூம் இணைந்து இந்த எதிர்காலத்தை உருவாக்கும்.

உலகில் வேறு எந்த நாடும் செய்யாததை இந்தியா சாத்தியப்படுத்தியுள்ளது. 140 கோடி பேரை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வந்ததன் மூலம், மாதந்தோறும் ரூ.2,000 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் பணப்பரிமாற்ற அமைப்பு மற்றும் 50 கோடி டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டைகளை வழங்கியுள்ள ஒரு சுகாதாரக் கட்டமைப்பையும் கொண்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், " குழந்தைகளையும், பதின்ம வயதினரையும் பாதுகாக்கும் முயற்சியில் நீங்களும் (பிரதமர் மோடி)இணையப் போகிறீர்கள்," மேக்ரான் தெரிவித்தார். இதன்மூலம் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை சூசகமாக கூறியுள்ளார். பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement