ஜிம்பாப்வே 'சூப்பர்' வெற்றி * இலங்கை அணியை வீழ்த்தி அசத்தல்

கொழும்பு: 'டி-20' உலக கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றி பெற்றது ஜிம்பாப்வே. நேற்று இலங்கை அணியை 6 விக்கெட்டில் வீழ்த்தி, 'ஷாக்' கொடுத்தது.
கொழும்புவில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை, 'பேட்டிங்' தேர்வு செய்தது.
இலங்கை அணிக்கு நிசங்கா, குசல் பெரேரா (22) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. 12 ஓவரில் இலங்கை அணி 100/1 ரன்களை எட்டியது. இதன் பின் குசல் மெண்டிஸ் (14) அவுட்டாக, அணியின் ரன் வேகம் குறைந்தது. நிசங்கா, 62 ரன்னில் (41 பந்து) அவுட்டானார். ரத்னாயகே 44 ரன் எடுத்தார்.
கமிந்து மெண்டிஸ் (7), கேப்டன் ஷானகா (6) ஏமாற்ற, இலங்கை அணி 20 ஓவரில் 178/7 ரன் எடுத்தது.
பென்னெட் அபாரம்
ஜிம்பாப்வே அணிக்கு பென்னெட், மருமானி (34) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ரியான் பர்ல் (23) அவுட்டான பின், பென்னெட், கேப்டன் சிக்கந்தர் ராசா ஜோடி சேர்ந்தனர். ஹேமந்தா வீசிய 15 வது ஓவரின் கடைசி 3 பந்தில், சிக்கந்தர் 6, 6, 4 என விளாச, 20 ரன் கிடைத்தன. பென்னெட் அரைசதம் எட்டினார். தொடர்ந்து மதுஷங்கா ஓவரில் (17) 14 ரன் எடுக்கப்பட, வெற்றியை வேகமாக நெருங்கியது ஜிம்பாப்வே.
திடீர் உற்சாகம்
கடைசி 12 பந்தில் 13 ரன் தேவைப்பட்டன. 19 வது ஓவரை வீசிய ஹேமந்தா, முதலில் சிக்கந்தர் (45), டஷிங்காவை (1) அவுட்டாக்க, 5 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. தீக்சனா வீசிய கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்டன. முதல் பந்தை டோனி முன்யோங்கா, சிக்சருக்கு அனுப்பினார். 3வது பந்தில் பென்னெட் ஒரு பவுண்டரி அடித்தார். ஜிம்பாப்வே அணி 19.3 ஓவரில் 182/4 ரன் எடுத்தது. பென்னெட் (63), டோனி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
இத்தொடரில் ஓமன், ஆஸ்திரேலியாவை வென்ற ஜிம்பாப்வே, அடுத்து இலங்கை அணிக்கு 'ஷாக்' கொடுத்து, மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. அயர்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது. இதையடுத்து ஒரு போட்டியில் கூட தோற்காமல் (3 வெற்றி, 1 ரத்து) 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது ஜிம்பாப்வே.

இரண்டாவது 'பெஸ்ட்'
நேற்று 182/4 ரன் எடுத்து வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி, 'டி-20' அரங்கில் தனது இரண்டாவது சிறந்த 'சேசை' பதிவு செய்தது. முன்னதாக, நமீபியாவுக்கு எதிராக 200/5 ரன் (2023) எடுத்து வென்றது.

2636 ரன்
சர்வதேச 'டி-20' அரங்கில் அதிக ரன் எடுத்த இலங்கை வீரர் ஆனார் நிசங்கா. இவர் 2636 ரன் (88 போட்டி) எடுத்துள்ளார். குசல் மெண்டிஸ் (104ல் 2607 ரன்) அடுத்து உள்ளார்.

Advertisement