'சுழல்' வலையில் தவிக்கும் இந்தியா...

ஆமதாபாத்: 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி பேட்டர்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறுகின்றனர்.
இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்திய அணியின் 'டாப் ஆர்டர்' பேட்டர்கள், 'ஆப் ஸ்பின்' பந்து வீச்சில் திணறி வருகின்றனர்.
இந்திய அணியின் 'டாப்-8' பேட்டர்களில் 6 பேர் இடது கை வீரர்கள். இதையடுத்து எதிரணி 'ஆப் ஸ்பின்னர்கள்' இவர்களை தங்களது சுழல் வலையில் எளிதாக சிக்க வைக்கின்றனர்.
இதுவரை முடிந்த 4 போட்டியில் இந்திய அணியினர் அதிகபட்சமாக 102 முறை 'ஆப் ஸ்பின்' பந்துவீச்சை எதிர்கொண்டனர். மற்ற அணிகள் பெரும்பாலும் 6 ஓவர்கள் தான் (36 பந்து) இதுபோன்ற பவுலிங்கை எதிர்கொண்டனர். இதில் இந்திய அணியின் சராசரி ரன் குவிப்பு 6.23 ஆக மட்டும் தான் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில், 'பவர் பிளேயில்' மட்டும் நெதர்லாந்து அணி 3 ஓவர், 'ஆப் ஸ்பின்' வீசியது. இதில் அபிஷேக் சர்மாவை 'டக்' அவுட்டாக்கினார் ஆர்யன் தத். இஷான் கிஷான், சூர்யகுமார், ஷிவம் துபே தவிர மற்ற பேட்டர்கள் தடுமாறுகின்றனர்.
அடுத்து 'சூப்பர்-8' சுற்று துவங்க உள்ள நிலையில், இப்பிரச்னைக்கு இந்தியா தீர்வு காண வேண்டும்.
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் டஸ்காட்டே கூறுகையில்,''இந்திய அணிக்கு 'ஆப் ஸ்பின்' பிரச்னை இருப்பதாக நினைக்கவில்லை. தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசிடம் இதுபோன்ற பவுலர்கள் உள்ளனர். எனினும் நமது பேட்டர்கள் சிறப்பாக செயல்படுவர்,''என்றார்.
கவாஸ்கர் 'அட்வைஸ்'
கவாஸ்கர் கூறுகையில்,'' ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில், பந்தில் அதிக திருப்பம் ஏற்படாது. இதனால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இங்கு மோதவுள்ள 'சூப்பர்-8' போட்டியில் (பிப்.22) களமிறங்கும் இந்திய லெவன் அணியில், குல்தீப்பிற்கு பதில், வாஷிங்டன் இடம் பெற வேண்டும். 8வது இடத்தில் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர் வாஷிங்டன். இது அணிக்கு உதவியாக இருக்கும்.
அபிஷேக் சர்மா சிறந்த வீரர். அதிக எதிர்பார்ப்பு காரணமாக, ஒருவிதமான அழுத்தத்தில் உள்ளார். முதல் பந்தில் இருந்து, சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என முயற்சி செய்யக் கூடாது. சிறிது நேரம் எடுத்துக் கொண்டு, சூழலுக்கு ஏற்ப விளையாடலாம். போட்டியை 'ஸ்மார்ட்' ஆக துவக்க வேண்டும். முதலில் ஒரு ரன் எடுத்து விட வேண்டும். பின், பவுண்டரி, சிக்சர் என அடிக்கத் துவங்கி விட்டால், பேட்டிங் எளிதாகும். வேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற 'ஷாட்' அடிக்கக் கூடாது,''என்றார்.

Advertisement